Wednesday, 19 November 2014

கண்ணுக்குத் தெரியாத முதலீடு (INVISIBLE INVESTMENT)

நண்பர்களே!  உங்க தோழி சிக்கூ உங்களை சந்திக்க திரும்ப வந்திருக்கேன்.  நாம சந்திச்சு ரொம்ப நாளாச்சு இல்லே?  ஒரு நல்ல இடத்துலே, புதுசா ஒரு வீடு, ஸாரி, கூடு கட்டியிருக்கேன்.  அதான் ரொம்ப 'பிஸி'.  நானும் எறும்பு  மாதிரி சுறுசுறுப்புதான்.  பாருங்க, இந்த எறும்புகள், மழைக்காலத்துக்கு சாப்பாட்டை எப்படி சேர்த்து வைக்குது?  மனுஷங்களும் சம்பாதிக்கறாங்க, சேர்க்கறாங்க, சொத்து வாங்கறாங்க, எதுலேயாவது முதலீடு செய்யறாங்க.  நிறைய 'பணம்' சம்பாதிச்சாதான் முதலீடு செய்ய முடியுமா?  தேவையில்லே.  அதுக்கு வேறே வழிகளும் இருக்கு.  பெரியவங்க சொல்லியிருக்காங்க, "வெறும் கை என்பது மூடத்தனம், பத்து விரல்களும் மூலதனம்..."

பல வருஷங்களுக்கு முன்னாலே, என் தோழி குக்கூ, அதான் கௌரி, இது சம்பந்தமா ஒரு கதை எழுதி, ரேடியோலே வாசிச்சாங்க.  அதுலே "கண்ணுக்குத் தெரியாத முதலீடு"ன்னு எதை சொல்றாங்க?  படிச்சு பார்த்து தெரிஞ்சுக்கலாமா?
               
                       

                    கண்ணுக்குத் தெரியாத முதலீடு
                         (INVISIBLE INVESTMENT}
          (WRITTEN AND PRESENTED THRO’ AIR BY MRS. GOWRI KRUPANIDHI)
                                ……………………
     கிழவியின் கண்களில் கண்ணீர் கரை கட்டியிருந்தது.  குருவி போல் சற்றே திறந்திருந்த வாயில் புன்சிரிப்பு.
“பட்டுப் பாவாடை, சட்டை, கழுத்தில் காசு மாலையும், முல்லையரும்பு வைத்து தைத்த சடையுமாக, சிறுமி கமலம் குதித்து குதித்து ஆடுகிறாள்.  காவிரி ஆற்று மணலில், கால்கள் புதையப் புதைய ஓடுகிறாள்…”

     அரைகுறையாக மூடிய கண்களுக்குள்ளே தெரிந்த இனிமையான பழைய காட்சிகள், திடீரென்று கலைகின்றன.  கிழவியின் கண், மூக்கு, உதடு என்று மாறி மாறி ஓர் ஈ வந்து உட்கார்கிறது.  அதை விரட்டப் பார்த்து, முடியாமல், கிழவி முகத்தை மூடிக் கொள்கிறாள்.

     கையில் பால் டம்ளருடன் வராந்தாவுக்கு வரும் ரத்னா, கிழவியின் தலையைத் தாங்கி உட்கார வைத்து, பாலைத் தருகிறாள்.  மீண்டும் படுக்க வைத்து விட்டு, அருகிலிருக்கும் ‘பெட் பானை’ சுத்தம் செய்ய எடுத்துச் செல்கிறாள்.  இரக்கம் ததும்பும் விழிகளுடன் மருமகளையே கவனித்துக் கொண்டிருக்கும் கிழவியின் கண்களில் கண்ணீர்.  மேசை விசிறியை கிழவியின் முகத்துக்கு நேராக திருப்பி வைத்துவிட்டு, ரத்னா செல்கிறாள்.

        இரண்டு வருடங்கள் முன்பு வரை அவள் கமலம்மா.  அந்த வீடு முழுக்க வளைய வந்து, நடுங்கும் விரல்களால், நூறு வேலைகள் செய்தவள்.  யார் எத்தனை மணிக்கு வந்தாலும் முகம் சுளிக்காமல், அன்புடன் உணவு பரிமாறியவள்.  பேரன், பேத்திக்கு சலிக்காமல் கதை சொன்னவள்.  ‘உதவி’ என்று யார் கேட்டாலும், சளைக்காமல் செய்தவள்.  மருமகளை மகளாக பாவித்தவள்.

     கமலம்மா நோய்ப் படுக்கையில் விழுந்து, கால்களும் பலமற்றுப் போய், தொய்ந்து விட்ட நிலையில், தன் காரியங்களுக்கே அவள் மற்றவரை எதிர்பார்க்க வேண்டி வந்தது.  இயற்கை உபாதைகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைந்து விட்டபின், ஒரு நர்ஸ் மூலம் அவளுக்கு ஒரு பையுடன் இணைக்கப்பட்ட ‘ட்யூப்’ பொருத்தப்பட்டது.

     அந்த வீட்டின் முன்னால் ஒரு வராந்தா, அடுத்து ஒரு சிறிய ஹால், பின் சமையலறை, அவ்வளவுதான்.  அந்த ஹாலில்தான் அனைவரும் படுக்க வேண்டும்.

     ஒரு நாள் அவள் மகன் மாதவன் மனைவியிடம் கத்தினான், “உழைச்சு சலிச்சு வீட்டுக்கு வந்தா, நிம்மதியா உட்கார்ந்து சாப்பிட முடியலே, ராத்திரி தூங்க முடியலே..நாத்தம் சகிக்கலே..”
ரத்னா அவனிடம் மன்றாடிப் பார்த்துத் தோற்றுப்போனாள். கமலம்மாவின் உறைவிடம் வராந்தாவுக்கு மாற்றப்பட்டது.  சிலரைத்தவிர, எல்லோருக்கும் அவள் ‘கிழவி’ அல்லது கிழமானாள்.

     வராந்தாவில் கிழவிக்கு அருகில் ஒரு ‘டேபிள் ஃபான்’. ஒரு சிறிய பக்கெட் தண்ணீர், குவளை, குடிக்கத் தண்ணீர், ‘பெட் பான்’, ஒரு புடவை ‘ஸ்க்ரீன்’.

     ஆரம்பத்தில் ஒரு நிமிடம் பேருக்கு நின்று, அம்மாவைப் பார்த்துவிட்டுச் சென்ற மாதவன், நாளாக ஆக, உள்ளே நுழையும்போதே, ஸ்க்ரீனை இழுத்து விட்டு, அம்மாவைப் பார்ப்பதையே தவிர்த்து உள்ளே போக ஆரம்பித்தான்.  அவன் உள்ளே சென்றதும் ரத்னா வெளியே வந்து, ஸ்க்ரீனை விலக்கி விடுவாள். கிழவி கண்களில் நன்றி பொங்கும்.  எதிரே வாசல், ‘க்ரில்’ ஜன்னல் வழியாகத் தெரியும் பறவைகள், வானம், விளையாடும் குழந்தைகள், இவை கிழவியின் தனிமைக்கு மருந்து.  வேடிக்கை பார்க்க சௌகரியமாக ரத்னா அவளைச் சற்று நகர்த்தி உட்கார வைப்பாள்.  மற்ற நேரங்களில் படுக்கைதான், அரைக்கண்கள் மூடிய நிலையில், கண்களில் நீருடன், சமயங்களில் பொக்கை வாய்ப் புன்னகையுடன்.

     கல்யாணமான பேத்தி சுமதியே ஒரு முறை தாயிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா இது? பாட்டிக்கு எப்பப் பார்த்தாலும் அழுகை இல்லே சிரிப்பு. வர வர அவ பேசறது எதுவுமே புரியலே. இப்படித் தானும் கஷ்டப்பட்டு, மத்தவங்களையும் கஷ்டப் படுத்தறாளே…”

“பாட்டி ஆசை, ஆசையா செஞ்சதெல்லாம் மறந்துட்டியா? நீயே இப்படிப் பேசறியே! நாளைக்கு எனக்கே ஒண்ணுன்னாலும், இப்படித்தான் பேசுவியா?”

     கிழவிக்கு கண் பார்வை மங்கினாலும், காது கேட்கிறது.  வாழ்க்கை நிகழ்ச்சிகள் அவ்வப்போது மனத்தில் திரைப்படம் போல் வந்து போகின்றன. மகிழ்ச்சியோ, துக்கமோ எதுவானாலும், கண்கள் கரகரவென்று நீரைப் பொழிகின்றன
.
“விளையாட்டுச் சிறுமி கமலம் கல்யாணமாகி வீடு, தோட்டம், மாடு, கன்று என்று கட்டியாண்டது, செத்துப் போன கணவரின் கடந்தகால லீலைகளால் கடனாளியாகி, நடுத்தெருவில் நின்றது…”

     எத்தனை வீடுகளின் அடுப்படிகளைப் பார்த்து விட்டாள்?  வாழ்ந்து கெட்டதால், வார்த்தைகளையும், ஓநாய்ப் பார்வைகளையும் பொறுக்க முடியாமல் விருட்டென்று விறைத்துக் கொள்ளும் மனதை, துணி மாதிரி சுருட்டி உள்ளே திணித்துக் கொண்டு, கடமையே உயிர் மூச்சாய், மாதவனை வளர்த்து ஆளாக்கிய காலங்கள்....அந்த நினைவுகளே சுட்டெரிக்கின்றன.  கண்களின் கண்ணீர் கிழ மனதின் உஷ்ணத்தினால் சூடாகி வழிகிறது. தொண்டைக் குழியிலிருந்து ஒரு விம்மல் வெடிக்கிறது.

     ரத்னாவின் பெரியம்மா வந்திருக்கிறாள், “இதென்னடி ரத்னா, இப்படி ஒரு கஷ்டம் உனக்கு?  உன் மாமியாரைப் பார்த்தா பகீர்ங்கறது.  அரைக்கண் தூக்கமும், கனாக் கண்டு அழறதும், சிரிக்கறதும், ஒண்ணுக்கும், ரெண்டுக்குமா.. இப்பவே நீ அரை ஆளா ஆயிட்டே.  இப்படியே எவ்வளவு நாள் செய்வே? கிழவிக்கு வாழணும்கற ஆசை இன்னும் போகலே..அதான் இப்படி அல்லாடறா…”

“என்ன பெரியம்மா? நமக்கு ஆயுசு இருந்ததுன்னா, என்னதான் செய்ய முடியும்?  நடை. உடையோட இருந்துட்டு, இப்படி பாயோட படுக்கையோட உயிரோட இருக்கணும்னு, யாராவது ஆசைப் படுவாளா? என்ன பக்தி? என்ன ஆசாரம்?  எவ்வளவு சுலோகம் சொல்லுவா?  எல்லாமே போய்.....அந்த மனசு எவ்வளவு கஷ்டப்படறதோ?”

     கிழவியின் உதடுகள் மடிந்து உடம்பு குலுங்குகிறது.
“ஆமாண்டியம்மா..எனக்கு உடம்பு ஒடுங்கிடுத்து, நாக்கு புரளலே. ஆனா..மனசு சதா வேலை செய்யறதே! ஆசாபாசம் அடங்கலியே! முருகா! உன்னைக் கூட நான் மறந்து போனேனே! ‘காக்கக் காக்க கனக வேல் காக்க, பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட….” மனதின் மொழியை வெளிப்படுத்த நாக்கு மறுக்கிறது.  கன்னாபின்னாவென்று வார்த்தைகள் கொட்டுகின்றன.

     வாசலில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு குட்டிப் பையன் ரத்னாவிடம் கேட்கிறான்,  ‘ஆன்ட்டி! இந்த  பாட்டி என்ன பேசறாங்க?  யாரையோ திட்டறமாதிரி இருக்கே?...’

‘பாட்டிக்கு யாரையும் திட்டத் தெரியாது.  ஏதாவது சுலோகம்தான் சொல்லுவாங்க …’"

‘அம்மாடி! நீயாவது என்னைப் புரிஞ்சுண்டியே….நீ நன்னா இருக்கணும்…’
பாட்டியின் இதழ்க்கடையில் சுருக்கங்கள்.

‘அதோ பார்!  பாட்டி சிரிக்கறாங்க ….’

‘பாட்டி ஏன் அழுதுண்டே சிரிக்கறாங்க?"

‘நரம்பெல்லாம் ‘வீக்’ ஆச்சுன்னா எதையுமே கட்டுப்படுத்த முடியாது.  சிரிச்சாலும் கண்ணுலே தண்ணி வரும்…."

‘இந்த பாட்டியோட பாஷையெல்லாம் இவங்களுக்கு மட்டும்தான் புரியும். நமக்கெல்லாம் புரியாது..." என்கிறாள் ரத்னாவின் பெரியம்மா.

     பாட்டிக்கு இரவும், பகலும் ஒன்றுதான். அரை மயக்க நிலையில், மனதில் தோன்றும் காட்சிகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.  அன்றும் அப்படித்தான்.

     “பத்து பேர் காலில் விழுந்து மாதவனை ஒரு வேலையில் அமர்த்தியாயிற்று. ரத்னா மருமகளாகிறாள். தாயற்ற அப்பெண்ணுக்கு கமலம் பிரசவம் பார்க்கிறாள். பேத்தி சுமதி, பிறகு பேரன் மகேஷ்..அந்த வீட்டின் ஒவ்வொரு இயக்கத்திலும் கமலத்தின் பங்கு இருக்கிறது.  சுமதியின் கல்யாணத்தின்போது கமலம் ஓய ஆரம்பித்து விட்டாள்…”

     சொத்தென்று ஏதோ ஒன்று முகத்தின் மேல் விழுந்து விட்டுப் போகிறது.  கிழவி அலறிக் கொண்டே விழிக்கிறாள்.  எப்படியோ உள்ளே வந்துவிட்ட ஒரு தவளை.  குச்சியால் அதைத் தள்ளிவிட கிழவியால் முடியவில்லை.  தீனமாக அலறுகிறாள். மாதவன் விழிக்கிறான்.

“சே! என்ன தொல்லை இது? நடு ராத்திரிலே அலறல்…நாள் பூரா தூங்கிட்டு, நாம தூங்கறச்சே உயிரை வாங்கறாளே! ரத்னா! போய்ப் பாரு…”

ரத்னா வந்து தவளையைத் தள்ளி விடுகிறாள். மறு நாளே வராந்தா அளவுக்கு, ஒரு பழைய நீளப் பலகையைத் தேடிப் பிடித்து, தடுப்பாக வைத்து விட்டுப் படுக்கச் செல்கிறாள்.

      சுட்டெரிக்கும் வெயிலுக்கிடையே  பெய்த ஒரு நாள் மழையினால், சூழ்நிலை குளிர்ந்திருக்கிறது.  கிழவி சாய்ந்து அமர்ந்து, வாசலில் விளையாடும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.  உள்ளே எண்ணெயில் பட்சணம் சுடும் வாசனை வருகிறது.  கிழவி வறண்ட உதடுகளை ஈரமாக்கிக் கொள்கிறாள்.

  சற்று நேரத்தில் வந்த ரத்னா, ஒரு ஸ்பூன் காராபூந்தியை நொறுக்கி, கிழவியின் வாயில் போடுகிறாள்.  கிழவியின் கண்களில் திருப்தி.  ஜாடையில் விசாரிக்கிறாள்,  ‘என்ன விசேஷம்?”

“நாளைக்கு மகேஷுக்குப் பிறந்த நாள்…”

கிழவி கையை நீட்டுகிறாள்.  அது எதற்கு என்று ரத்னாவுக்குத் தெரியும். “இருங்கோ..” உள்ளே செல்கிறாள்.
 
  மறு நாள்.  “எனக்கு பர்த்டே பாட்டி…” வணங்கும் பேரனை ஆசீர்வதிக்கிறாள் கிழவி.  ரத்னா கொடுத்த டப்பாவிலிருந்து பேனாவையும், சாக்லேட்டுகளையும் துழாவி எடுத்து, நடுங்கும் விரல்களால் மகேஷிடம் கொடுக்கிறாள்.

“தாங்க்ஸ் பாட்டி…’ பேரன் கல்லூரிக்குக் கிளம்புகிறான்.

பாட்டியின் முகத்தில் பரவசம்.  அதைப் பார்த்து ரசிக்கிறாள் ரத்னா.  வயதானவர்கள் எதையெல்லாம் விரும்புவார்கள் என்று அவளுக்குத் தெரியும்.

  அன்று மாதவனின் அலுவலக நண்பர்கள் வந்திருந்தார்கள்.  தொங்கும் திரைச்சீலைக்குப் பின்னால் புதுப்புது மனிதக் குரல்கள். இடையில் ‘ஸ்க்ரீன்’ விலக்கப்பட்டு, ஒரு சிறிய அறிமுகம். தொடர்ந்து உள்ளே பேச்சுக் குரல்கள் கேட்டன.

“இந்த மாதிரி படுத்த படுக்கையா நாலு நாள் கிடந்தாலே பார்த்துக்கறது கஷ்டம்.  நீங்க எல்லாரும் ‘க்ரேட்’, ஸார்…”

“மேடம்! சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.  நீங்க அவங்களுக்குப் பார்த்துப் பார்த்து ஆகாரம் கொடுக்கறீங்கன்னு ஸார் சொன்னார்.  அதெல்லாம் வேணாம்..இவங்க இன்னும் இருந்து என்ன சுகப்படப் போறாங்க?  போற உயிரைப் பிடிச்சு வெச்சுக்க வேணாம்..விட்டுடுங்க…”

  அவர்கள் சென்று விட்டார்கள்.  கையில் கஞ்சியுடன் வந்த ரத்னாவின் முகத்தில் குழப்பம்.  சற்று நேரமாகிவிட்டதால், கிழவியின் காய்ந்த உதடுகளும், நாக்கும் கஞ்சியை பரபரப்புடன் உள்வாங்கிக் கொண்டன.  ரத்னா யோசித்தாள். “எத்தனை பேருக்குப் பார்த்துப் பார்த்து பரிமாறிய ஜீவன்? இந்த ஜீவன் நாக்கும் பல்லும் உலர்ந்து போய், பசியால் வயிறு ஒட்டி இழுத்துக்கொண்டு, பரிதவிச்சுப் போய், அணுஅணுவா சாகறதை, நான் கண்கொண்டு பார்க்கணுமா? என்னாலே அப்படி ஒரு பாவத்தைச் செய்யவே முடியாது..கடவுளே! என் உடம்பு ஓய்ஞ்சு, மனசு சலிச்சுப் போறதுக்குள்ளே, இந்த ஜீவனுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுப்பா..”

  அன்று காலை முதல், ரத்னாவைக் காணவில்லை.  மகேஷ் பால் டம்ளரைக் கொண்டு வந்து வைக்கிறான்.  “அம்மாவுக்கு ஜுரம் பாட்டி, எழுந்திருக்க முடியலே…இதைக் குடிங்க ..நான் வாயிலே விடறேன்..காலேஜுக்கு டயமாச்சு.." 

கிழவி "வேண்டாம், நீ போ , நான் குடிப்பேன்.." என்பது போல் ஜாடை காட்டினாள் ..

  ரத்னாவுக்கு உதவ மதியம் வந்த பக்கத்து வீட்டு வேலைக்காரி கன்னியம்மா, திரைச் சீலையை விலக்கினாள். காலை மகேஷ் வைத்துச் சென்ற பால், செத்துப் போன ஈயுடன் அப்படியே இருந்தது.

“அட! நீ பாலைக் குடிக்கலியா? அம்மாவுக்குக் காய்ச்சல் நெருப்பு மாதிரி பொரியுது.  நான் கஞ்சி எடுத்தாரட்டுமா?”

“வேண்டாம்..பசியில்லை…” என்று ஜாடை காட்டினாள் கிழவி.

மாலை டாக்டர் வந்து சென்றார்.  அன்று இரவும், மகேஷ் வைத்தப் பாலை, கிழவி குடிக்கவில்லை.  மறு நாள் மாதவன் கத்தினான்.

“நீ என்ன நினைக்கறே? அவகிட்டே மட்டும்தான் செஞ்சுப்பியா?  அவ பெரிய படுக்கையா போட்டுடுவா போலேருக்கு. மகேஷ் எக்ஸாமுக்குப் படிக்கணும். உனக்கு உபசாரம் செய்ய எங்களுக்கெல்லாம் நேரம் கிடையாது தெரியுமா?”

அதற்குப் பின் இரண்டு நாட்கள் எந்த ஆகாரமும் வரவில்லை.  ஒரு வாய் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டுக் கிழவி சுருண்டு கிடந்தாள்>

    மூன்றாவது நாள் காலை.  சக்தியின்றி மயங்கிக் கிடந்த கமலத்தின் வாயில், ஒரு ஸ்பூன் பால் விழுகிறது.

“அம்மா! நீங்க இப்படி செய்யலாமா?”

ரத்னாவின் குரல் கேட்டு விழித்த கிழவியின் கண்களில் அதீத பளபளப்பு. கண்ணீருடன் ‘களக்..களக்..’ என்று பாலை சிறிது விழுங்குகிறாள்.  ரத்னாவின் இரு கைகளையும் பற்றி, தன் நெஞ்சின் மேல் வைத்துக் கொள்கிறாள்.  திடீரென்று கிழவிக்கு சுவாசம் வேகமாக வாங்குகிறது. பதறிய ரத்னா, எல்லா தெய்வங்களையும் மாறி மாறி பெயரிட்டு அழைக்கிறாள்.

  சற்று நேரத்தில் எல்லாமே அடங்கிவிட்டது.  ரத்னாவின் நெஞ்சு பரிதவித்தது. “தூங்க முடியாம இத்தனை நாள் நீங்க தவிச்சாச்சு. இனிமே நிம்மதியா தூங்குங்கோ..”

  செய்தியறிந்த மாதவன் ஃபோனில் அலுத்துக் கொண்டான், “அட ராமா! மாசக் கடைசியாச்சே! என்ன செய்வேன் இப்போ?”

“முடிஞ்சதைக் கொண்டு வாங்கோ. பார்த்துக்கலாம்…”

  கும்பல் சேர்ந்து விட்டது.  வாசலில் நின்ற காரிலிருந்து உள்ளே வந்தவர், விசாரித்துக்கொண்டு மாதவனிடம் வந்தார்…”உங்கம்மாவைப் பார்க்கத்தான் வந்தேன்..ஐயம் ஸாரி…இதை நான் எதிர்பார்க்கலே…” தொடர்ந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  “என் பேர் ராமநாதன். படுத்த படுக்கையாயிட்ட எங்கம்மாவைக் கமலம்மாகிட்டே ஒப்படைச்சுட்டுத்தான் நான் ‘ஸ்டேட்ஸ்’ போனேன்.  எங்கம்மாவுக்காக கமலம்மா செய்யாத வேலையே கிடையாது. இந்த மாதிரி சேவைக்கெல்லாம், சம்பளம் கொடுத்து கணக்கு தீர்க்க முடியாது. பணம்தான் அனுப்ப முடிஞ்சுதே தவிர, எங்கம்மா ‘டெத்’துக்குக் கூட என்னாலே வர முடியலே. எங்கண்ணாதான் காரியமெல்லாம் செஞ்சார்.  அப்படிப்பட்ட புண்யாத்மாவுக்குச் செய்யற பாக்கியம், உங்களுக்குக் கிடைச்சிருக்கு, ஸார்…”

மாதவன் கண்கள் நிலத்தை நோக்கின.

“உங்கம்மா ஃபோட்டோ இருந்தா கொடுங்க..பத்திரிகைக்குக் கொடுக்கறேன்.  அதோட எனக்கும் வேணும்…” என்றவர், பர்ஸைத் திறந்து ரூபாய் நோட்டுக்களை கொத்தாக உருவி, மாதவனிடம் திணித்தார்…”என்னோட யாரையாவது அனுப்புங்க.  செலவைப் பத்தி கவலைப்படாதீங்க.  இந்த புண்ணியத்துலே எனக்கும் பங்கு கிடைக்கட்டும்…”

  பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வந்து குவிந்த அனுதாபக் கடிதங்கள், மணியார்டர்கள், காசோலைகள்…. கமலம்மாவின் காரியங்கள் தடையின்றி நடந்தன.

  ராமநாதன் மாதவனிடம் அவனது அலுவலக வேலை, சம்பளம் ஆகிய விபரங்களை விசாரித்தார்.

“இருபது வருஷத்துக்கு மேலே ‘ஸர்விஸ்’ போட்டிருக்கீங்க.  சம்பளம் இவ்வளவு கம்மியா இருக்கே..கவலைப்படாதீங்க..நான் உங்களுக்கு இதை விட ‘பெட்டர் ஜாப்’ கிடைக்க ஏற்பாடு செய்யறேன்..மைலாப்பூர்லே எங்க பழைய வீட்டிலே ஒரு போர்ஷன் காலியாயிருக்கு..இதை விட வசதியாயிருக்கும்..நல்ல ‘ஸென்டர் ப்ளேஸ்’…நீங்க அங்கே குடி வந்துடுங்க…”

“இங்கேயெல்லாம் வாடகை கம்மி…மைலாப்பூர்னா.. நிறைய வாடகை என்னாலே கொடுக்க முடியாதே ஸார்…  மாதவன் தயங்கினான்.

“பரவாயில்லே…இப்போ நீங்க என்ன வாடகை கொடுக்கறீங்களோ, அதையே கொடுங்க… அங்கே ஒரு போர்ஷன்லே என் சித்தி இருக்காங்க.. ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கலாமே?”

ராமநாதன் வாயால் கூறியவற்றையெல்லாம்,செயல்படுத்தவும் செய்தார். 
“கமலம்மாவோட ஒரே பிள்ளை நீங்க.. உங்களுக்கு என்ன செஞ்சாலும் தகும்…”

நல்ல சம்பளத்தில் வேலை,  அருமையான குடியிருப்புப் பகுதியில் வசதியான இருப்பிடம்.....அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. 

 மகேஷ் அக்கா சுமதியிடம் கூறிக் கொண்டிருந்தான், “இந்த வீடு 'ஸூப்பர் லொகாலிடி'லே  அமைஞ்சிருக்குக்கா. ..அந்த அங்கிள் ரொம்ப நல்லவரா இருக்கார் இல்லே?” 

ரத்னா கூறுகிறாள், “அங்கிள் நல்லவர்தான். இதெல்லாம் அவர் செய்ய யார் காரணம் தெரியுமா?  உங்க பாட்டி…அத்தனையும் உங்க பாட்டியோட உழைப்பு, நல்ல மனசு..நமக்கு பாட்டியோட ஆசீர்வாதம் கிடைச்சிருக்கு…”

  யாரோ பெறாத பிள்ளை அணிவித்த சந்தன மாலையை அணிந்து, படத்தில் சிரித்துக் கொண்டிருந்த அம்மாவைக் கூர்ந்து நோக்கிய மாதவனின் கண்கள் பனிக்கின்றன.

“அம்மா! எனக்காக கண்ணுக்குத் தெரியாம இவ்வளவு சேர்த்து வைச்சிருக்கியேம்மா……உன் பிள்ளைன்னு சொல்லிக்கவே பெருமையா இருக்கே… உன்னை ஒதுக்கின எனக்கும், இப்படி ஆசீர்வாதம்
பண்ணறியேம்மா…”

 தன் தாயை நினைத்து, முதன்முறையாக மாதவன் குலுங்கிக் குலுங்கி
 அழுகின்றான்.

                             --------------------------
   

              என்ன?  கதையை  படிச்சீங்களா?  கமலம்மா கண்ணுக்குத் தெரியாம சேர்த்து வைச்ச சொத்து  என்னன்னு  தெரிஞ்சுகிட்டீங்களா?  அம்மான்னா  அம்மாதான். நம்ம கூட இருந்தாலும், பிரிஞ்சு போயிட்டாலும் , அவங்க மனசும், ஆத்மாவும் எதுவுமே முடியாட்டாலும், நமக்காக  சாமியையாவது வேண்டிக்கும்.  "செத்தும் கொடுத்தான் சீதக்காதி "ன்னு ஒரு கதை  சொல்லுவாங்க. சீதக்காதியாலே  மட்டும்தான் முடியுமா?  ஒவ்வொரு அம்மாவாலேயும் கூட முடியுங்க.  அட! நேரமாச்சு.  என் குழந்தைகள் எனக்காக பசியோட காத்திட்டிருப்பாங்க.  நான் வரட்டுமா நண்பர்களே!

Saturday, 21 June 2014

A bright, prosperous future....(ஒளி மயமான எதிர்காலம்)

ஒளி மயமான எதிர்காலம் (சிறுகதை)
(எழுதியவர் – கௌரி கிருபாநிதி)
                    (ஜூலை 1999 – ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது)              
                                     ---------


       சில்லென்ற கடற்காற்றும், சித்திரா பௌர்ணமி நிலவின் தண்ணொளியும், அந்த விசாலமான மேல் மாடியை சொர்க்கமாக்கியிருந்தன.  ‘பாரத் அபார்ட்மெண்ட்ஸின்’ குடியிருப்புகள் ஏறக்குறைய காலியாகிக் கொண்டிருந்தன. ‘காஸெட்’ சங்கீதத்தினால், மேல் மாடி கலகலத்துக் கொண்டிருந்தது.  விதம் விதமான வண்ண உடைகள் சரசரத்தன.

       சற்று நேரத்தில், மாடியில் ‘மூன்லைட் டின்னர்’ அமர்க்களப் பட்டது.  ‘வாலண்டியர்’களாக மாறிய ஆண்களும், பெண்களும், ஒரு பெரிய வட்டமாக எல்லோரையும் உட்காரவைத்து, உணவு வகைகளைப் பரிமாறினர்.  பகவதியின் மலையாளப் பால் பாயசம், பார்வதியின் பிஸி பேளா, பஹாளா பாத், மைதிலியின் புளியோதரை, சிப்ஸ், ஆயிஷா செய்த குலாப் ஜாமூன், செல்வி செய்த வெஜிடபிள் புலாவ், வள்ளியின் குழாய்ப்புட்டு, மேரியின் கை வண்ணத்தில் ப்ளம் கேக், ஐஸ்க்ரீம் – இப்படி எல்லாம் பஞ்சாகப் பறந்து கொண்டிருந்தன.

“பிஸி பேளாவும், புலாவும் வாயை விட்டு நீங்கலே..”

“வள்ளி! இந்த புட்டு எப்படி செஞ்சீங்க?”

“வெண்ணிலாவும், வானும் போலே ..அடுத்தபடியா ‘ஐயங்காரும், புளியோதரையும் போலே’ன்னு பாடலாம் போலே இருக்கு..” சிலாகித்த மகாதேவனை ரகசியமாக அடக்கினாள் பார்வதி..
“காணாததை கண்டுட்ட மாதிரி ரொம்ப வழிய வேண்டாம். இதுலே என்னென்ன சேர்த்துருக்கான்னு தெரிஞ்சுண்டு நாளைக்கே பண்ணிக்காட்டறேன் பாருங்கோ..”

“மேரி! ஐஸ்க்ரீம் கட்டியா வராம, இப்படி ‘க்ரீமி’யா வர என்ன செய்யணும் சொல்லுங்களேன்..”

“ஆயிஷா! குலாப் ஜாமூன் சைஸை கொஞ்சம் குறைச்சிருக்கலாம். பிள்ளைங்க எல்லாம் இன்னொண்ணு கேக்குதுங்க..”

“நான் நிறையதான் செஞ்சிருக்கேன்.  எடுத்துக்குங்க..”

“ஆயாசம் போக்க பகவதி ஆன்ட்டியின் சூடான பாயாசம் குடிங்க..” என்று மாதவன் அபிநயிக்க, மகிழ்ந்து போன பகவதி, அவன் கோப்பையை மீண்டும் நிரப்பினாள்.

       ‘டின்னர்’ முடிந்து, துப்புரவுப் பணியில் இளசுகள் மும்முரமாக இறங்க, பத்தே நிமிடங்களில் மேல் மாடி சுத்தமாகி விட்டது.
“இனி தொடர்வது … ‘பல்சுவை நிகழ்ச்சி’, முதலில் இறை வணக்கம்.. வழங்குபவர் திவ்யா…”, தொடர்ந்து நண்டு, சிண்டுகளின் ‘ரைம்ஸ்’, ‘முஸ்தஃபா’, ‘வெண்ணிலவே’, ‘மானா மதுரை மாமரக் கிளையிலே’, ‘அகிலா அகிலா..’, இவற்றுக்கு விதம், விதமான
குதியல்கள், நெளியல்கள்..

            ஒரு மூலையில்ப்ளஸ்-டூ’  எழுதிய மாணவச் செல்வங்களின் பெற்றோர் ஒரு தனி மாநாடு நடத்தினர்.

“எல்லாம் குதியாட்டம் போடுதுங்க.  எக்ஸாம் ரிஸல்டை நெனச்சா பக்கு பக்குங்குது..”
என்றாள் வள்ளி.

“நைன்ட்டி பர்ஸென்ட் வாங்கினா கூட போறாது, நைன்ட்டி எய்ட்டாவது வாங்கணும்.. அப்பத்தான் மெடிகல், எஞ்சினியரிங் பத்தி நெனச்சாவது பார்க்க முடியும்..” இது பார்வதி.

“அண்ணா யூனிவர்ஸிடி இல்லேன்னாலும், ‘டோட்’லேயாவது மாதுவுக்குக் கிடைச்சா சரி..”

“அது மட்டும் ஈஸியா என்ன? ’பேமென்ட் ஸீட்’டுக்கே நிறைய மார்க் வாங்கணும்..”

“ராப்பகலா படிச்சாள் கொழந்தே..அவளுக்கு ‘மெடிகல்’ கெடைச்சே ஆகணும்..” இது
மேனகாவின் அம்மா பகவதி.

“எக்ஸாம் ஜுரம் இப்ப நமக்கெல்லாம் வந்துடுத்து.  நம்ம குழந்தைகள் ஒரு வழியா
‘ஸெட்டில்’ ஆனாத்தான் அது விடும்..”

       “சப்பா சப்பா சர்கா சலே..” சிறுவர்களின் கோரஸுக்கு டப்பாக்களும், தட்டுகளும், கரண்டிகளுமே தாள வாத்தியங்களாயின.  ‘இனி பொறுக்க முடியாது’ என்ற நிலை வந்ததும், சமயோசிதமாக மகாதேவன் நன்றி நவில, ‘மூன் லைட் டின்னர்’ இனிதே
நிறைவேறியது.

       கணபதி, மோனிஷ், மாதவன், சரவணன், அப்துல் பெரும்பாலும் சேர்ந்தே
சுற்றினார்கள்.  திவ்யாவும், மேனகாவும் தம் பள்ளித் தோழிகளுடன் சேர்ந்து கொண்டார்கள்.  கல்லூரிகளுக்குப் படையெடுத்து, பிடித்த கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தார்கள்.  எழுதிய தேர்வுகளையும், எதிர்காலத்தையும் பற்றி வாய் வலிக்கப் பேசினார்கள். ‘அப்ளிகேஷன்’ வாங்கப் போன சில கல்லூரி வாசல்களில், ‘ஸீனியர்’களால் ‘ராகிங்’ என்ற பெயரில் வழிப்பறி செய்யப்பட்டு, பணமிழந்தார்கள், தொப்பியிழந்தார்கள்.

“இன்னும் ரெண்டு காலேஜுக்குப் போக, கையிலே பணமில்லாம போச்சும்மா..”

“இது என்னடா அநியாயம்? வேகாத வெய்யில்லே ‘ஹாட்’டையுமா கழட்டிக் குடுப்பீங்க?”

“கேட்டா, ‘வர வருஷம் வட்டியும் முதலுமா நீங்க வசூல் செஞ்சுடுங்க’ன்னு சொல்லி சிரிக்கறாங்க ஆன்ட்டி..  ஃப்ரெண்ட்ஷிப்புக்காக சந்தா வசூலிக்கறாங்களாம்..”

       எல்லா மதிப்பெண்களும் வந்து விட்டன.  கணபதியும், மேனகாவும் ‘ஸ்கூல் டாப்பர்ஸ் லிஸ்ட்’டில் இடம் பெற்றிருந்தனர்.  மோனிஷ், மாதவன் இருவரும் எண்பதுக்கு மேல் வாங்கியிருந்தனர்.  திவ்யா, அப்துல், சரவணன் மூவரும் சுமாராக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

“பார்வதியும், பகவதியும் எங்களுக்கு ‘ஸ்பெஷல் ஸ்வீட்’ தந்தாகணும்.. கணபதி! மேனகா!  நீங்க டாக்டரானதும், எங்களுக்கெல்லாம் ஃபீஸை குறைச்சுப்பேளோன்னோ?” என்றாள் மைதிலி.

“மாதவன்தான் ‘என்ட்ரன்ஸ்’லே நிறைய வாங்கிட்டானே! அவனுக்குக் கண்டிப்பா ‘எஞ்சினியரிங் ஸீட்’ கெடைச்சுடும்..” என்றாள் பார்வதி.

“சே! இந்த மோனிஷ் கொஞ்சம் விளையாட்டைக் குறைச்சிட்டிருக்கலாம். ‘கட் ஆஃப் மார்க்ஸ்’ ‘ஃப்ரீ ஸீட்’டுக்குப் பத்தாது..” என்றாள் மேரி.

“எங்க திவ்யா அந்த கஷ்டமெல்லாம் குடுக்கலே.  அவளுக்கு ‘காலேஜ் அட்மிஷன்’ கெடைச்சாலே போதும்..” என்றாள் பார்வதி.  கணபதியும், திவ்யாவும் இரட்டைக் குழந்தைகள்.

ஆயிஷாவும், வள்ளியும் மௌனமாக இருந்தனர்.  கேட்டதற்கு ஆயிஷா சொன்னாள்.

“இந்த அப்துலும், சரவணனும் சொல்லிக்கும்படியாவா மார்க்கு வாங்கியிருக்குதுங்க?”

       மருத்துவம், பொறியியல் இரண்டு நுழைவுத் தேர்வுகளும் எழுதியிருந்த கணபதிக்கு, பொறியியலில் இடம் கிடைத்தும், அவன் மறுத்து விட்டான்.  மருத்துவத்தில் சேர ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்களில் ஒன்று குறைந்து விட்டதால், இடம் கிடைக்கவில்லை.

“எனக்கு ‘மெடிகல்’லேதான் ‘இன்ட்ரஸ்ட்’, ஆன்ட்டி.. எல்லா இடத்துலேயும் ‘ட்ரை’ பண்றேன்.. ஏதாவது கிடைக்காதா?” என்றான் கணபதி.

“உனக்குக் கிடைக்கலேன்னா, ஆருக்கு கிடைக்கும், கொழந்தே?” என்றாள் பகவதி.

       “பாரத் அபார்ட்மென்ட்ஸ்” பெற்றோர்களின் மனதில், மகிழ்ச்சி போய், மன உளைச்சல் குடியேறியது.  முதலில் ஏதாவது கல்லூரியில் சேர்த்து விட்டு, பிறகு ஏதாவது கிடைத்தால் மாற்றி விடலாம் என்று முடிவெடுத்தனர்.  எல்லோரும் சேர விரும்பும், நகரின் பிரபலமான கல்லூரிகளிலிருந்து ஒருவருக்கும் அழைப்பு வரவில்லை.  ஒரு நாள் சரவணன் சொன்னான்,

“எனக்கு காலேஜ் ஸீட் கிடைச்சிடுச்சு, ஆன்ட்டி..
எல்லோரும் அவனைப் பார்த்த பார்வையில், ‘எப்படி’ என்ற ஆச்சரியக் கேள்வி.

“’பாக்வர்ட் கம்யூனிடி கோட்டா’லே..”

சரவணன் அகன்றதும், அங்கு வந்த மேரி சொன்னாள்,

“இவங்க ‘பாக்வர்ட் கம்யூனிடி’ன்னு இத்தினி நாள் நமக்குத் தெரியாதில்லே?”

“வள்ளி புருஷனுக்கு துபாய்லே எக்கச்சக்க சம்பாத்தியம்.  அவ கட்டறதெல்லாம் ‘ஃபாரின் ஸாரி’தான்.. இந்த ‘ஃப்ளாட்’ தவிர, சொந்த ஊர்லேயும் அவங்களுக்கு ஒரு வீடு இருக்கு.. சரவணன் எப்பவுமே ஒரு இளவரசன் மாதிரி ‘ட்ரெஸ்’ பண்ணறான்.. ‘ஃபினான்ஷியலா’ இவ்வளவு ‘ஃபார்வார்டா’ இருக்கறவாளுக்கு, ‘பாக்வர்ட்’னு சாதி அடிப்படையிலே சலுகை..ஹூம்..” என்று நெடுமூச்செறிந்தாள் பார்வதி.

“மாதவன், மோனிஷ், திவ்யா எல்லாருமே இவனை விட நிறைய மார்க் வாங்கியிருக்காங்க.. ஒருத்தருக்கும் இது வரைக்கும் வரலியே..”

“மாதவனுக்கு ‘பேமென்ட் ஸீட்’டாவது கிடைக்கும், சேர்ப்பீங்க இல்லே?” என்றாள் மேரி.

“அவன் ஒரே பிள்ளையில்லையே! ரமா கல்யாணத்துக்கு ரெடியா நிக்கறாளே!  அவளை எம்.எஸ்ஸி. படிக்க வெச்சாச்சு.  கொஞ்சம் நல்ல இடமா பார்க்கணும்னா, கையிலே கணிசமா வேண்டாமா?”

“நாமெல்லாம் இந்த ‘ஃப்ளாட்’ வாங்கின கடனையே இன்னும் அடைச்ச பாடில்லையே!” அங்கலாய்த்தாள் பார்வதி.

“எண்ணி எண்ணி செலவு செய்யறோம்.. ரேஷன் கடைக்கு எல்லாரும்தான் படையெடுத்து, சாமான் வாங்கறோம்.. எல்லாத்துக்கும் க்யூவிலே நிக்கறோம்.. நம்ம தலையிலே ஏதாவது கிரீடம் இருக்கா என்ன?  பகவான் நம்மளை எந்த விதத்துலே உசத்தியா வெச்சிருக்கார்னு எனக்குப் புரியலே..” என்றாள் பகவதி.

“பழைய தலைமுறை செஞ்ச தப்புக்கு, இந்த தலைமுறை கஷ்டப்படுது.. நம்ம பிள்ளைங்களுக்கு ‘தீண்டாமை’ன்னா என்னன்னு தெரியுமா? என்றாள் மேரி.

       செலவினங்களை சமாளிக்க சிறு குழந்தைகளுக்கு ‘ட்யூஷன்’ எடுக்கும் பொறுப்பை மேற்கொண்டிருந்தாள் மைதிலி.  ஒரு நாள் குழந்தை அருணா தமிழ் படித்துக் கொண்டிருந்தாள்..

“காந்திஜி தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார்..”

“தீண்டாமை’ன்னா என்ன ஆன்ட்டி?”, அருகிலிருந்த மோனிஷ் அன்று கேட்டது, மைதிலியின் நினைவுக்கு வந்தது.


“அந்தக் காலத்துலே உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதின்னு பிரிச்சு வெச்சிருந்தாங்க.  தாழ்ந்த ஜாதிக்காரங்களை இவங்க எதுக்கும் சேர்த்துக்க மாட்டாங்க.. ஒரே குளத்துலே குளிக்க விட மாட்டாங்க. கிணத்துலே தண்ணி எடுக்கக் கூட விட மாட்டாங்க.. கோயில்லே எல்லாம் உள்ளே விட மாட்டாங்க.. பெரிய ஜமீன்தார்கள், இவங்களை கொத்தடிமை மாதிரி நடத்தினாங்க..’படிப்பு முக்கியம்’னு இவங்களுக்கு யாருமே சொல்லிக் கொடுக்கலே.. நிறைய தலைவர்கள் பாடுபட்டு, இதையெல்லாம் மாத்தினாங்க..”

“இப்ப அப்படியெல்லாம் கிடையாதுதானே? யார் வேணும்னாலும் படிக்கலாம். குளிச்சு, ‘நீட்’டா ‘ட்ரெஸ்’ செஞ்சுகிட்டு, யார் வேணும்னாலும் கோயிலுக்குப் போகலாம்தானே?”

“முக்காவாசி அப்படித்தான்.  எங்கேயாவது மூலைலே இருக்கற சில கிராமங்களிலே, சிலர் இன்னும் மாறாம இருக்காங்க..”

       இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மாதவன் கேட்டான்..

“அந்த மாதிரி மாறாதவாளை தேடிப் புடிச்சு, பெரியவா திருத்தட்டுமே!  எங்களை ஏன் ‘பனிஷ்’ பண்ணணும்? நானும், சரவணனும் எத்தனை நாள் டிபன் பாக்ஸை மாத்திண்டிருக்கோம் தெரியுமா?  ஜாதியைப் பத்தியெல்லாம் நாங்க நெனச்சேப் பார்த்ததில்லே.  அவா நம்மளை விட பணக்காரா. அவாளை தாழ்ந்த ஜாதின்னு எதை வெச்சு முடிவு பண்ணறா?  இந்தியாவை மதச் சார்பற்றதுன்னு சொன்னா போறுமா? ‘ஜாதி என்ன’ன்னுதானே முதல்லே கேக்கறா? ‘எல்லாரும் இந்தியத் தாயின் மக்கள்’னா, ‘ஜாதி ஸர்டிஃபிகேட்’ எதுக்கும்மா?”

”குழந்தைகளிலே எது நோஞ்சானா, சீக்காளியா இருக்கோ, அதைத்தானே அம்மா இடுப்பிலே தூக்கி வெச்சுப்பா?”

“உண்மையாவே ‘வீக்’கா இருக்கற குழந்தையை தூக்கி வெச்சுக்கட்டும்.  ஜாதி அடிப்படைலே சலுகை கொடுத்து, ஒரு குறையுமில்லாம புஷ்டியா இருக்கற சோம்பேறிக் குழந்தைகளைக் கூட இந்த அம்மா தூக்கி வெச்சுண்டு, ரேஸ்லே முன்னாலே வந்த எங்களை ஒதுக்கி வெக்கறாளே, இது என்ன நியாயம்?”..

“ஸ்.. வள்ளி ஆன்ட்டி கேட்டா தப்பா நினைச்சுக்கப் போறா.. போய் டிபன் சாப்பிடு..” என்று மாதவனை அனுப்பி விட்டு, ட்யூஷனைத் தொடர்ந்தாள் மைதிலி.  மகன் பேச்சில் இருந்த நியாயம், அவள் மனதை நெருடிக் கொண்டே இருந்தது.

”யாரோ படுத்தி வெச்சா.  யாரோ கஷ்டப்பட்டா.  படுத்தி வெச்சவாளும், பாடுபட்டவாளும், தண்டனையோ, சலுகையோ கிடைக்காம போய் சேர்ந்தாச்சு.  பல வருஷத்துக்கு முன்னாலே, தென்னை மரத்துலே தேள் கொட்டித்து.  இப்போ வளர்ந்து நிக்கற பனை மரத்துலே நெறி கட்டறது..”  வருத்தத்திலும், சிரிப்பு வந்தது மைதிலிக்கு.

       சில நாட்களில், மோனிஷுக்கு நகரின் பெரிய கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்து விட்டது.  மற்றவர்கள் பேசிக் கொண்டார்கள், “அவங்க மதத்தைச் சேர்ந்தவங்களுக்கு அங்கே ‘ப்ரையாரிடி’ கொடுக்கறாங்க…”

எல்லா பல்கலைக் கழகங்களும் கைவிட்ட நிலையில், ஒரு வெளியூர் பல்கலைக் கழகத்திலிருந்து, கணபதிக்கும், மேனகாவுக்கும் நேர்முகத் தேர்வுக் கடிதம் வந்தது.  உற்சாகத்துடன் கிளம்பியவர்கள், தொங்கிய முகத்துடன் திரும்பினார்கள்.  கிருஷ்ணன் குட்டி சொன்னார், “இது கிடைக்கணும்னா, ஒரு லட்சம் சொர்ண புஷ்பம் வைக்கணுமாம்..”

“ஆயிரக்கணக்கா ‘அப்ளை’ பண்றவாளை, ‘வேணாம், இது வேஸ்ட்’டுன்னு தடுக்கணும் போலேயிருக்கு..” என்றார் மகாதேவன் ஆத்திரமாக.

“இருக்கறவா குடுக்கறா.  நாம தடுத்தா எல்லாரும் கேட்டுடுவாளா?” என்றார் ராகவன்.

“இனிமே வைத்தியம் பண்ணிக்கணும்னா, கிழ டாக்டராதான் தேடணும்.. ஏன்னா, சின்னவாள்ளே, உண்மையாவே திறமையாலே முன்னுக்கு வந்தவா யாருன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?” என்றாள் பார்வதி.

       அப்துலும் ஒரு கல்லூரியில் சேர்ந்து விட்டான்.  இப்ராஹிம் சொன்னார்’ “சிபாரிசுங்க.  அங்கே நம்ம மனுஷங்க இருக்காங்க.  அப்படியும், இங்கே அங்கே திரட்டிக் கொடுத்துத்தான் சேர்த்தோம்.  பையன் செய்யப் போறது நம்ம வியாபாரம்தான்னாலும், படிப்பு போதும்னு விட்டுட முடியுங்களா?”

“பாவம். மேனகா, கணபதிக்கு இங்கே ஒரு காலேஜ்லேயிருந்து ‘இன்டர்வியூ’வுக்கு வந்தப்ப, அவங்க வெளியூருக்குப் போயிட்டாங்க.  அதுவும் கிடைக்கலே, இதுவும் போச்சு.. அவங்க சில காலேஜுக்குத்தான் ‘அப்ளை’ செஞ்சாங்க..”

       ‘பாரத் அபார்ட்மென்ட்’ஸில் வரவர கலகலப்பு குறைந்தது.  முகங்களில் இறுக்கம். ‘மூன்லைட் டின்னரில்’ மகிழ்ச்சியில் பளபளத்த கண்களில் ஏக்கம், அநுதாபம், பொறாமை, அசூயை, அலட்சியம், இன்னும் ஏதேதோ உணர்ச்சிகள்..

“நான் பெரிய ந்யூரோ ஸர்ஜனாகணும்..” என்று கணபதி சொன்னபோது, “குட். லட்சியத்தை விட்டுடாதே..” என்று வாழ்த்திய வாய்கள், இன்று விமரிசிக்க ஆரம்பித்தன.

“கிடைச்ச ஸீட்டையும் விட்டுட்டே.  எல்லா காலேஜுக்குமாவது அப்ளை செஞ்சிருக்கலாம் இல்லே?”

கணபதியின் இலட்சியத்துக்கு ‘அசட்டுப் பிடிவாதம்’ என்று பெயர் சூட்டப் பட்டது.  அந்தக் காலனியின் தலை சிறந்த மாணவனும், மாணவியும் குற்ற உணர்வினால் குறுக ஆரம்பித்தனர்.

       மேனகாவுக்கு ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தது. விரும்பிய பிரிவு கிடைக்கவில்லை.  திவ்யா தபால் மூலம் படிக்க முடிவு செய்தாள்’ தையலும் கற்க ஆரம்பித்தாள்.

       ஒரு நாள். ஒரு கல்லூரி முதல்வரை விடாப் பிடியாய் போய் பார்த்தனர் கணபதியும், மாதவனும்.  முதல்வர் கேட்டார்..

“இட்ஸ் டூ லேட்.  உங்களுக்கு நான் எந்த அடிப்படைலே ஸீட் கொடுக்க முடியும்?”

“மோஸ்ட் பாக்வர்ட் கம்யூனிடி’ங்கற அடிப்படைலே கொடுங்க ஸார்..”

முதல்வரின் நெற்றி சுருங்கியது…”வாட் டூ யூ மீன்?”

“யெஸ்.  நாங்க லட்சம் லட்சமா பணத்தைக் கொடுக்க முடியாத, முற்பட்ட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க.. அதாவது, இன்னிக்கு மிகவும் பிற்படுத்தப் பட்டுள்ள சந்தர்ப்ப ஏழைகள் நாங்க.. தகுதி இருந்தும், விரும்பினது கிடைக்காம, கிடைக்கறதை விரும்ப வேண்டிய கட்டாயத்திலே இருக்கறவங்க..”

       முதல்வர் அவர்களை உற்று நோக்கினார்.  விரக்தியில் கனன்ற அக் கண்களில், அக்கினிக் குஞ்சின் சிறு பொறிகள், அவர் கண்களுக்குப் புலப்பட்டன.

         வெளியில் வந்த கணபதியும், மாதவனும் பேசிக்கொண்டனர், “நாம எஜுகேஷனல் லோனுக்கு அப்ளை செஞ்சு, பேமென்ட் ஸீட்லேயாவது கிடைச்ச காலேஜ்லே சேர்ந்துடணும்…..நம்மளை ஸ்டூடென்டா அடையறதுக்கு இந்த காலேஜுக்கெல்லாம் கொடுத்து வைக்கலே..அவ்வளவுதான்…” சிரித்தனர்.

“படிப்பு முடிஞ்சதும் எப்படியாவது வேலை பார்த்து கடனை அடைச்சுடறோம்னு சொன்னா, அப்பா ஏற்பாடு செய்வார்…” மாதவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

இவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த பெரியவர், அருகில் இருந்தவரிடம் சொன்னார், “இந்த காலத்துப் பசங்க ரொம்ப புத்திசாலிங்க.. ஆனா, சில பேருக்கு ஏமாத்தங்களை தாங்கற சக்தியில்லே. வாழ்க்கையே பறிபோயிட்ட மாதிரி, குழம்பிப் போய், தப்பு தப்பா முடிவு எடுக்கறாங்க.  இந்தப் பசங்க மாதிரி தெளிவோட யோசிச்சா, வாழ்க்கையிலே பிரமாதமா முன்னுக்கு வந்துடுவாங்க..  க்யூவிலே நிக்கறவங்களுக்கு, காஃபி, டீ ஊத்திக் கொடுக்கறவன் கூட சந்தோஷமா பிழைக்கறான்.  சந்தோஷமா வாழ வழியா இல்லே?...”

“வாழ்த்துக்கள் தம்பிகளா!  நீங்க ரொம்ப நல்லா வருவீங்க..” வாயார வாழ்த்தினார்.  அவரை வணங்கிய கணபதி, மாதவன் கண்களில் பிரகாசமான ஒளி தென்பட்டது.


                                      --------------------------------------------

Hello friends, Deservant students sometimes face disappointment, because they are deprived of opportunities they seek, due to various reasons.  It doesn't necessarily mean that they are deprived of a bright, prosperous future too!  When some doors are closed, so many other doors are open for them.  Using their intelligence, they have to make use of the opportunities which are open for them and come out successful.

Hello youngsters! A very bright, prosperous future is awaiting you!   All the very best!


                                



                

Sunday, 18 May 2014

Hello Mr./Ms. Loudspeaker! (Short story)

Hello friends!  In our life,  we are meeting so many people.  Some people don't know how to behave or speak in public places.  They are not aware of the consequences.  They won't pay heed to advices.  Noone else can mend them.  They will learn by their own experiences.  How?  The answer is available in my short story, "Hello Mr./Ms. Loudspeaker!"

HELLO MR./MS. LOUDSPEAKER!  (Short story)

It was a busy Monday morning.  The travellers in the bus felt the bus was moving at snail's pace.  Crowd, perspiration, impatience... Mr. Murugan didn't care about all this.  He was going on talking with his friend in a voluminous voice.  His conversation covered so many subjects,..his family, friends, office, politics, his likes and dislikes, future plans and so on...  His friend was just listening to him, nodding his head now and then, as he was not offered much time to talk.

At last, when Mr. Murugan was about to get down from the bus, he invited his friend, "Ravi!  You have not visited our new house.  Next week, we are leaving for Salem.  Visit us after 10 days.  Remember my address..no. 10, New Street, near Selva Vinayagar Temple..Don't forget!..."  Along with the bus, his speech also came to a halt.

Next week, the house at no. 10, New Street was in a great chaos.  Police personnel, sniffer dogs..Our hero, Mr. Murugan was shouting and crying alternatively.  "So many are here.  I don't know why these damn burglars have chosen my house.  I have lost almost everything.  Please help me, sir!  The culprits should be  nabbed as early as possible, dipped in the drainage and put in the prison for life time..."

"Okey, okey..", the police inspector patted him, "now tell me who were all the persons who knew about your Salem trip?.."

Mrs. Murugan stopped her crying and answered this question instantaneously in a desperate voice,  "Who knows?  The whole city,..or even the whole world might have known about our trip...".


                                                                   -----------------

Wednesday, 19 March 2014

Best wishes to Chikkoo and friends on World Sparrow Day!

Hi friends! It's World Sparrow Day (WSD) on March 20.  This is a wake-up call. Our little friends are fast disappearing.  Let's work together to find ways and means to protect the sparrow population.  The reasons for their depleting numbers is the change in our lifestyle, the vibrations from mobile phone towers which can affect the eggs of the birds, lack of trees, the houses of today which don't provide comfortable places for sparrows to make a home.

Lack of accommodation.

 House sparrows, our tiny and lovely companions during the past decades, lived near human habitation, built their nests in the nooks and crannies of our houses, behind the photographs or calling bells.  Now they don't find such places in our houses.

Lack of nourishing food.

The heavy use of pesticides, chemicals and fertilizer in agriculture, killed the worms and insects that the sparrow chicks fed on and hindered their attaining maturity.  In those days, grain harvested in the fields were cleaned in the courtyards of homes and provision shops and chaff was thrown to the birds, eagerly waiting in the suburbs.  The little sparrows then flocked to a huge banquet.  Now, grocery shops are few in number.  Grain is mechanically cleaned, packed in polythene bags and sold in supermarkets.  No open spaces in houses or grannies who clean the grains..So no food for our little companions, whose lives depended on the helping hand of humans who were the cause of their downfall and made it difficult for them to survive.

But hope was not lost.  In the 2010s, several organisations came together to create an awareness and to conserve not only the house sparrow, but also many common birds.  Hence, this celebration of World Sparrow Day all over the world..this year on March 20.

What can we do?

Scatter a grain in a flat dish and keep a clean pan of water everyday in our garden, verandah or open space.

Learn to make bird feeders that we can use at home and school.

Create awareness by talking to friends and others.

Monitor the birds around us.

Host a WSD party, have a fancy dress competition, get sparrow tattoos or go on a sparrow walk.

Visit an interesting website to know what we can do.  http:/www.natureforever.org/blog/tag/world-sparrow-day.

(Compiled with the courtesy of the Hindu - Young World .  Thanks to Ms. Rohini Ramakrishnan, the author of the article "Celebrate a companion").

Hello Chikkoo, my dear friend!  I dedicate the compilation of the above article to you, your friends,  all your ancestors and kith and kin.  My love and best wishes to you all on this World Sparrow Day!




Friday, 17 January 2014

Why we celebrate 'Kanu'?

Hello friends, I'm Chikkoo signing in again.  Hope you celebrated Bhogi, Pongal and 'Kanu' Pongal very well.  On Bhogi, we thank the Rain God, Indra; on Pongal, we worship and thank the 'Sun God', without whose grace or rays, our life itself is impossible.  The next day, ie. on 'Maattu Pongal', we worship the cattle and thank the farmers, for their service to humanity.

What is 'Kanu Pongal'?  on Kanu Pongal, we ladies get up early in the morning, get the blessings of elders along with markings with tender turmeric on our forehead (the blessings in poetic form will be interesting), find out some open space around our house, clean it, put 'kolams', place turmeric and ginger leaves on them and serve small balls of sweet pongal, yellow rice, red rice, curd rice (prepared on the previous day), sugarcane pieces, bananas and thaamboolam (betel leaves-nuts).  Then we offer them along with our prayers, chanting such words like, "kaakkaa pidi vechchEn, kannu pidi vechchen, kuruvi pidi vechchen, kokku pidi vechchen..en udan pirandhaanum, pirandha veedum nannaa irukkaNum.." (The chantings will vary from place to place).  Then we perform pooja, camphor haarathis etc. and pray God to accept our offerings and bless us.

Then we take head-bath to drive out 'kanu peedai' and offer thaamboolams to our guests along with sugarcane pieces.

We, children of yesteryears, were not in the habit of asking our elders more and more questions to get our doubts clarified.  Now we feel belatedly we should have asked some questions.  But children of today will not accept anything, unless they get their doubts clarified.  It's a welcome improvement.  Will a child of today listen to the grandma-story quietly of the sparrow, which picked up rice, gave it to grandma for making paayasam, tasted the hot kheer, spat it in the pond, drank the whole water of the pond and released it in the cattle-shed, thus making everything float on the water? But we did.  sirippadhaa, azhuvadhaa, theriyavillai.

Today as elders, we have to answer their questions.  If we don't know, we have to think and find out the answers.  I have thought and come to the conclusion that these must be the answers.

Offering our namaskaarams and getting the blessings of elders.

These are occasions to show our gratitude and respect towards our elders, thus filling their hearts with abundant joy and making them feel that however grown-up, we are still their possession and this feeling will improve their mental health.

Offerings to birds and calf.

Crows are our companions from time immemorial.  Even now, its population has not declined here, but in some foreign places, we cannot see even a single crow.  So, let's offer our prayers and food to what all birds available around us, as these tiny creatures are also to be greeted and treated with friendliness.  'Kanu' day reminds us of this.

Offerings.

In addition to our usual offerings, we can include vadai, boli etc., which will be liked by the birds.  There is no control or limitation as to what we should offer.  Thinking that birds may not like the taste of manjal-kumkum rice, I usually prepare the red rice, with a pinch of kesar powder and sugar.  Usually, the birds first take sugarcane pieces, sweet pongal, curd rice etc.  The curd shouldn't be very sour to taste.

Chanting prayers.

The words may differ.  The main purpose is we sincerely pray for the welfare and prosperity of our brothers and sisters.  In return, the brothers give gifts to their sisters or send gift-money.  This they do in response to the love and affection shown by their sisters, by their 'maanaseega praartthanai'.  We cannot imagine how much happy the sister will be, when she receives a gift from her brother, irrespective of her financial status or age.  It's not only because of the gift, but the message she gets that she is remembered by her brother with love and affection.  This is a wonderful custom to tighten the bondage between brothers and sisters, despite the distance factor and difference of opinions between them.

Now, times are changing.  The size of families has shrunk with 2 or a single child.  Now we can broaden our thinking and pray for universal brotherhood and welfare of the entire humanity.  Let's pray like this, "All in this world are my brothers and sisters.  Oh God! Please bless all of us with peace, plenty and prosperity!"  Even if we don't have brothers or sisters, we can celebrate this day by feeding the poor or donating to charitable institutions.

Taking head-bath on Kanu day.

After the kanu rituals, we take head-bath to drive out all evil thoughts, anger, hatred, enmity, jealousy, if any, in us, thus driving away 'kanu peedai', purify ourselves and become ready to welcome the peaceful days of the new year.

We may say our 'Kanu' is South India's 'Rakshaa Bandhan'.  The intention is one and the same.  The Raakhee thread is tied and the assurance of protection is given here too, but invisibly in their hearts.

Stay tuned for my next blog-post, friends!  It will be a short story in Tamil with a message.  Bye!


Monday, 6 January 2014

New Year Wishes and the story of Rani, a sweet little kid.

Hello friends, I'm Chikkoo signing in again.  Wish you all a very happy new year, 2014!  Let this and the forthcoming years be happy, prosperous, peaceful and healthy to all of you!  Prosperity and peace bring happiness.  We can really be happy, only if we are hale and healthy.  Health is the greatest wealth, you know?

Regarding our health, awareness about the Dos and Don'ts is very much essential.  This awareness helps us a lot from the beginning till the end, ie., from the safe pregnancy followed by a safe delivery, the healthy upbringing of the kids, keeping them informed about what all we know and have learnt by our own experiences and opening all possible doors for them for learning more and more to equip and safeguard themselves against health problems, thus enabling them to contribute in building a healthy society, both physically and mentally.

So many terrible diseases like smallpox, hooping cough, Tetanus. Polio and many other such diseases have almost been eradicated by administering periodical vaccination, injections or oral drops etc..

Now..if we are ignorant of or indifferent towards taking such precautionary measuress, what will happen?  So many living examples are there.  One such example is our Mangai, in the short story 'Dhandikkappadum thaLirgaL' meaning 'kids who are punished'.  It was the first story written and presented through AIR by my friend, Gowri (Kukkoo) in 1985 approximately.  Mangai is not an imaginary character, but a living person.

The child Rani and her feelings, ..what all she goes through..Please read her story in Tamil and publish your comments on this..

                            தண்டிக்கப்படும் தளிர்கள் (கௌரி கிருபாநிதி)
                                       (written and presented thro" AIR in 1986)

தம்பி ரவி பள்ளியிலிருந்து வந்து விட்டான்.  மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது ராணிக்கு.  ரவியின் கையில் ஒரு புதிய பந்து.

"அப்பா வாங்கிக் கொடுத்தாரு ராணிக்கா.."

"கொஞ்ச நேரம் என்னோட விளையாடறியா ரவி?"

அக்காவுடன் பந்தை உருட்டி விளையாடுகிறான்.  வீட்டுக்காரம்மா கொடுத்த பாலை இருவரும் குடிக்கிறார்கள். பிறகு ரவி நண்பர்களுடன் விளையாட மேல் மாடிக்குப் போய் விடுகிறான்.  சற்றுத் தொலைவில் பெண் குழந்தைகள்
'ஸ்கிப்பிங்' விளையாடுகிறார்கள்.  அவர்கள் ஆட்டத்தை ராணியின் ஏக்கம் தோய்ந்த விழிகள் பார்க்கின்றன.  இனி அம்மா வரும் வரை, தன்னைச் சுற்றித் துடிப்புடன் இயங்கும் உலகை வேடிக்கைப் பார்ப்பதிலேயே அவள் பொழுதைக் கழித்து விடுவாள்.  பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள், பெரியவர்கள், வண்டிகள், கடைத் தெருக்களின் கலகலப்பு என்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் காட்சிகளைக் காணும்போது, அவள் மனம் சிறகடித்துப் பறக்கிறது.  வாசலில் தன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு, 'கீய் கீய்' என்று சத்தமிடும் காலணிகளை அணிந்து கொண்டு, குதித்து குதித்து நடக்கும் பிஞ்சுக் குழந்தையின் வெண்மையான பஞ்சுப் பாதங்களைப் பார்க்கும் பார்க்கும்போது, அவற்றை அள்ளி முத்தமிட வேண்டும் போல் இருக்கிறது.  உடனே தன்னை இப்படி முடக்கி வைத்திருக்கும், தன் சிறுத்துச் சூம்பிய பொம்மைக் கால்களைப் பார்த்துக் கொள்கிறாள்.  தம்பியின் பையிலிருந்து அவன் புத்தகத்தை எடுத்து, அதைப் பார்த்து அம்மா கொடுத்திருக்கும் தன் நோட்டுப் புத்தகத்தில், சொற்களை ஒவ்வொன்றாக எழுதுகிறாள்.

காற்று வேகமாக வீசுகிறது.  தம்பியின் புத்தகத்தில் கிழிந்த ஒரு தாள் பறந்து செல்கிறது.  "ஐயோ!" பரபரவென்றுக் கால்களைத் தேய்த்து, தாளைப் பிடிக்க நகர்கிறாள்.

"சாந்தி! அந்த பேப்பரை பிடிச்சுக் கொடுக்கறியா?"

ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டிருந்த சாந்தி பறக்கும் தாளைப் பிடித்து ராணியிடம் தருகிறாள்.

"திருப்பித் திருப்பிப் பறக்க விட்டால் எடுத்துத் தர மாட்டேன்.  உனக்கேன் இதெல்லாம்?  சும்மா உட்கார வேண்டியதுதானே?"

ராணியின் முகம் வாடுகிறது.  இது அவளுக்குப் புதிதல்ல.  எல்லோரும் சொல்வதைப் பார்த்து, "ஒன், டூ, பக்கில் மை ஷூ.." என்று 'ரைம்ஸ்' சொல்லா ஆரம்பித்து, "நொண்டி ராணி..." என்ற ஏளனம் எதிர்ப்பட்டதும், உற்சாகம் வடிந்து, கூட்டுக்குள் நத்தையாக சுருங்கி விடுவாள்.  அந்த ஆறு வயதுக் குழந்தையின் மனத் தழும்புகள், அதற்கு வயதுக்கு மீறிய மன முதிர்ச்சியை அளித்திருந்தன.  தூரத்தில் தெரியும் மலைக் கோட்டையை பார்க்கிறாள் ராணி.  முகத்தில் ஆயிரம் மௌனப் புலம்பல்கள் தெரிகின்றன.

திருச்சி மலைக் கோட்டைக்கருகில், அந்த வீட்டின் வராந்தாவில்தான், ராணி நாளின் பெரும்பகுதியை கழிக்கிறாள்.  அவள் அப்பா சண்முகம், நான்கு தெரு தள்ளி, ஒரு வாடகை சைக்கிள் கடை நடத்துகிறார்.  அம்மா மங்கை, வயலூர் சாலையில் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறாள்.  விடிகாலை சமையல் வேலைகளை முடித்து, ராணியை குளிப்பாட்டி உணவளித்து, வராந்தாவில் உட்கார்த்தி வைத்து விட்டு, வீட்டுக்கார அம்மாளிடம் சொல்லி விட்டு ஓடுவாள்.  சண்முகம் ரவியைத் தயார் செய்து, சாப்பிட்டதும் பள்ளியில் விட்டு விட்டுக் கடைக்குச் செல்வான்.  மாலை, அந்த வீட்டுக் குழந்தைகளுடன் ரவி வீடு திரும்பி விடுவான்.  ஏழு மணி சுமாருக்கு அம்மா வருவாள்..  அவளைத் தூக்கித் தன் போர்ஷனுக்கு எடுத்துச் செல்வாள்.  வேலைகளைச் செய்து கொண்டே, அவளுடன் பேசுவாள்.  அவளைத் தன் அன்பு மழையால் குளிப்பாட்டுவாள்.  இரவு ராணியைக் கட்டிக் கொண்டு படுப்பாள்.  அடிக்கடி, அம்மாவின் சூடான கண்ணீர்த் துளிகள் ராணியின் கழுத்தை நனைக்கும்.

காலையில் சண்முகம் ரவிக்கு எல்லாம் செய்து விடுவான்.  ராணியை கவனிக்கும் பொறுப்பு மங்கையுடையதுதான்.  விடுமுறை நாட்களில் ரவிக்கு ஜோராக 'ட்ரெஸ்' செய்து, தன் தோளில் உட்கார வைத்துக் கொண்டு, சினிமாவுக்குச் செல்வான்.  ராணிக்குப் பொறாமையே எழாது.  அவள்தான் கீழ் வீட்டு டி.வி.யில் சினிமா பார்க்கிறாளே!  அவளுக்கு ஒரே ஒரு ஆசை உண்டு. 'எல்லோரும் கூட்டமாக ஏறிப் பார்க்கும் மலைக் கோட்டைப் பிள்ளையாரைத் தானும் பார்க்க வேண்டும்!'

எலும்பும், தோலுமான அம்மாவுக்கு வீட்டிலும், வெளியிலும் உழைக்கவே நேரம் போதவில்லை.  'அப்பா தன்னை ஒரே ஒரு முறைத் தூக்கிச் சென்று, பிள்ளையாரைக் காட்டக் கூடாதா' என்று ஏங்குவாள்.  சண்முகம் கோயிலுக்கேப் போக மாட்டான்.  ராணியின் ஆசை பற்றி ஒரு முறை மங்கை சொன்னபோது, "ஆமாம், கடவுள் நமக்கு ஒரு பொண்ணைக் கொடுத்திருக்கற லட்சணத்துக்கு, ஏறிப் போய் வேறப் பார்க்கணுமாக்கும்.." எனச் சீறினான்.

களிமண்ணில் ஒரு குட்டி மலை செய்து, அதன் மேல் அம்மா தனக்கு வாங்கித் தந்த பிள்ளையார் பொம்மையை, ராணி வைத்துக் கொண்டிருக்கிறாள்.  குட்டி மலையின் படிகளின் மேல் தன் கை விரல்களைப் பதித்து, படிகளைக் கடந்து, மேலே இருக்கும் பிள்ளையாரை எண்ணற்ற முறை அடைந்திருக்கிறாள்.  அப்போதெல்லாம் அக்குழந்தையின் உள்ளம், எதையோ சாதித்து விட்டது போல், அபரிமிதமான மகிழ்ச்சியையும், நிறைவையும் அனுபவித்திருக்கிறது.

மறுநாள் அந்த வீட்டின் மாடிக்குப் புதிதாக ஒரு தம்பதிகள் குடி வருகிறார்கள், ஒரு மளிகைக் கடை முதலாளியும், அவரது 'டீச்சர்' மனைவியும்.  குழந்தைகள் ஏதும் இல்லை.

அன்று மாலை, ராணியருகில் வந்த டீச்சர், அவள் நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்க்கிறாள்.  "அழகா எழுதியிருக்கியே, வெரி குட்.." என்கிறாள்.  அம்மாவுக்கு அடுத்தபடியாக, தன்னிடம் வலிய வந்து அன்புடன் பேசும் டீச்சரம்மாவை, ராணி வியப்புடன் பார்க்கிறாள்.  உடைப்பெடுத்த வெள்ளம் போல், தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லியும், எழுதியும் காண்பிக்கிறாள்.

இரவு டீச்சரம்மா, ராணியைப் பற்றி மங்கையிடம் கேட்கிறாள்.  மங்கை வழக்கம் போல் பொங்கி அழுகிறாள்.  ஆறு மாதக் குழந்தை ராணியின் ஃபோட்டோவை எடுத்துக் காண்பிக்கிறாள்.  "எப்படி இருக்குது பார்த்தீங்களா அக்கா?  இதுக்கு இந்த கதி வர நானே காரணமாயிட்டேன்.  தடுப்பூசி, போலியோ மருந்து ஒரு தடவை கொடுத்தாங்க.  அடுத்த தடவை..இதுக்கு நல்ல ஜுரம், பேதி.  எனக்கும் வயித்திலே ரவி நாலு மாசம்.  ஏற்கனவே லீவ் நிறைய போட்டாச்சு.  அப்போ ராணியோட ஆயா இங்கே இருந்தாங்க.
"நானும் மூணு பெத்து, வளர்த்தேன்.  ஒரு ஊசி, மருந்து கொடுக்கலே. எல்லாரும் கல்லு குண்டாகத்தான் வளர்ந்தாங்க.  மருந்தும் வேணாம், ஊசியும் வேண்டாம்" னாங்க.  இவருக்கும் முரட்டு சுபாவம்.  சண்டைக்குப் பயந்து, பாவி நான், அடுத்த டோஸ் எல்லாம் ராணிக்குக் கொடுக்கலே.  நல்லா இருந்த பொண்ணோட காலும், வாழ்க்கையும் இப்படி முடங்கிப் போக, நானே காரணமாயிருந்துட்டேன்.  இப்ப கூட இதை எங்கேயாவது காண்பிச்சு சரி செய்ய மாட்டோமான்னு தவிக்கிறேன்.  வயித்துப் பாட்டுக்கு அல்லாடவே வாழ்க்கை சரியாப் போயிடுது.  இவர் வருமானத்துலே முக்காலும் சிகரெட்டுக்கும், சினிமாவுக்குமே சரியாயிருக்கும்.  இவளைக் கண்டாலே வெறுக்கிறார்க்கா.  நான் என்ன கோட்டை கட்ட முடியும்? சொல்லுங்க.. இவளுக்குப் படிக்க எவ்வளவு ஆசை தெரியுமா?"

மங்கையை டீச்சரம்மா சமாதானப் படுத்துகிறாள், "இனிமே அழுதுப் பயனில்லே.  ராணி ரொம்ப கெட்டிக்காரி.  தினம் ராத்திரி ஒரு மணி நேரம் எங்கிட்டே விடு.  அதுக்கு நான் படிப்பு சொல்லித் தரேன்.."
மங்கை மகிழ்ச்சியில் திக்கு முக்காடுகிறாள்.

மூன்று மாதங்கள் ஆகி விட்டன.  ஏற்கனவே அம்மாவிடமிருந்து ஓரளவு கற்றிருந்த ராணி, வெகு விரைவில் வாக்கியங்களை எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டு விட்டாள்.  இப்போதெல்லாம் அவள் ரவிக்குக் கூட சொல்லித் தருகிறாள்.

அவளுக்குள் ஒரு புதிய சாளரம் திறந்து கொள்கிறது.  டீச்சரம்மாவின் அன்பு, தென்றலின் வருடல் போல், அவளுக்கு இதமளிக்கிறது.  அறிவுச் செல்வத்தை அள்ளிப் பருகுவதில், தன் உள்ளத்தின் வேட்கைகளையெல்லாம் தணித்துக் கொள்கிறாள் ராணி.

"ராணி மாதிரி ஒரு புத்திசாலிக் குழந்தை கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும், மங்கை.  கவலைப்படாதே.  போகப் போக இன்னும் வேறே அவளுக்கு என்ன செய்யலாம்னு யோசிப்போம்..."

"என் பிரச்னை அவங்களுக்கு ஒட்டிக்குமோன்னு, உறவுக்காரங்க எல்லாரும் ஒதுங்கி ஓடறாங்க.  நான் என்ன சொல்றது?  அகிலாண்டேஸ்வரித் தாயாரே நீங்கதாங்க்கா..." மங்கை தழுதழுக்கிறாள்.

அன்று ராணியின் பிறந்த நாள்.  காலை அம்மா செய்து கொடுத்த இனிப்பின் சுவை, ராணியின் நாவிலேயே இன்னும் இருக்கிறது.  அம்மா தனக்கு ஆசையோடு அணிவித்திருந்த புது கவுனைப் பெருமையோடு பார்த்துக் கொள்கிறாள்.

மறு நாள் மதுரையில் பெரிய அத்தையின் பெண்ணுக்குக் கல்யாணம்.  அப்பா அதற்காக ரவியை அழைத்துக் கொண்டு, மதுரை சென்றிருக்கிறார்.

இனி அம்மா வரும் வரை என்ன செய்வது?  திண்ணையோரம் குவிக்கப் பட்டிருந்த கற்களிலிருந்து ஏழு சிறு கற்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு, தானே தனியாக விளையாடத் தொடங்குகிறாள் ராணி.

சிறிது நேரத்தில் டீச்சரம்மா, அவர்கள் கடைப் பையனுடன் ராணியிடம் வருகிறாள்.

"ராணிக்குட்டிக்கு ஒரு 'ஸர்ப்ரைஸ்'.  இன்னிக்கு மலைக் கோட்டைப் பிள்ளையாரைப் பார்க்கப் போறோம்.  உங்கம்மாகிட்டே காலையிலேயே
சொல்லிட்டேன்..."

ராணியைத் தூக்கிக் கொள்ளக் கடைப் பையன் கையை நீட்டுகிறான்.  ராணியால் தன் செவிகளையே நம்ப முடியவில்லை.  தன் பிள்ளையார் பொம்மையைப் பார்க்கிறாள், மானசீகமாகப் பேசுகிறாள்...

"நிசமாவே நான் உன்னைப் பார்க்கப் போறேனா?..."

ராணியின் அழகிய புருவங்கள் விரிகின்றன.

வண்ண மயமான கற்பனைகள் நிறைந்த அவள் உலகம், எங்கோ தொலைவிலிருந்து அவளை நோக்கி நெருங்கி வருகிறது.

தண்டிக்கப்பட்ட ஒரு தளிரின் நெஞ்சத்தில், நம்பிக்கை அரும்பு மெல்லத் தலை தூக்கிப் பார்க்கிறது.

                                                         ------------------------------

என்ன? கதையை படிச்சீங்களா?  நாம நம்ம கடமைகளை உதாசீனப்படுத்தக் கூடாது.  நடக்கிற நல்லவை, தவறுகள் எல்லாத்துக்கும் நாமதான் பொறுப்பு.  தவறுகளுக்கு வேறே யாரையும் காரணமா சொல்லக்கூடாது.  சில சமயம் சில பேருக்கு, நல்லது செய்யக் கூட போராட வேண்டியிருக்கு.  வேறே வழியில்லை, போராடியாவது சாதிச்சுதான் ஆகணும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!