ஒளி மயமான எதிர்காலம் (சிறுகதை)
(எழுதியவர் – கௌரி
கிருபாநிதி)
(ஜூலை
1999 – ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது)
---------
சில்லென்ற
கடற்காற்றும், சித்திரா பௌர்ணமி நிலவின் தண்ணொளியும், அந்த விசாலமான மேல் மாடியை
சொர்க்கமாக்கியிருந்தன. ‘பாரத் அபார்ட்மெண்ட்ஸின்’
குடியிருப்புகள் ஏறக்குறைய காலியாகிக் கொண்டிருந்தன. ‘காஸெட்’ சங்கீதத்தினால்,
மேல் மாடி கலகலத்துக் கொண்டிருந்தது.
விதம் விதமான வண்ண உடைகள் சரசரத்தன.
சற்று நேரத்தில்,
மாடியில் ‘மூன்லைட் டின்னர்’ அமர்க்களப் பட்டது.
‘வாலண்டியர்’களாக மாறிய ஆண்களும், பெண்களும், ஒரு பெரிய வட்டமாக
எல்லோரையும் உட்காரவைத்து, உணவு வகைகளைப் பரிமாறினர். பகவதியின் மலையாளப் பால் பாயசம், பார்வதியின்
பிஸி பேளா, பஹாளா பாத், மைதிலியின் புளியோதரை, சிப்ஸ், ஆயிஷா செய்த குலாப் ஜாமூன்,
செல்வி செய்த வெஜிடபிள் புலாவ், வள்ளியின் குழாய்ப்புட்டு, மேரியின் கை வண்ணத்தில்
ப்ளம் கேக், ஐஸ்க்ரீம் – இப்படி எல்லாம் பஞ்சாகப் பறந்து கொண்டிருந்தன.
“பிஸி பேளாவும், புலாவும் வாயை விட்டு நீங்கலே..”
“வள்ளி! இந்த புட்டு எப்படி செஞ்சீங்க?”
“வெண்ணிலாவும், வானும் போலே ..அடுத்தபடியா ‘ஐயங்காரும்,
புளியோதரையும் போலே’ன்னு பாடலாம் போலே இருக்கு..” சிலாகித்த மகாதேவனை ரகசியமாக
அடக்கினாள் பார்வதி..
“காணாததை கண்டுட்ட மாதிரி ரொம்ப வழிய வேண்டாம். இதுலே என்னென்ன
சேர்த்துருக்கான்னு தெரிஞ்சுண்டு நாளைக்கே பண்ணிக்காட்டறேன் பாருங்கோ..”
“மேரி! ஐஸ்க்ரீம் கட்டியா வராம, இப்படி ‘க்ரீமி’யா வர என்ன
செய்யணும் சொல்லுங்களேன்..”
“ஆயிஷா! குலாப் ஜாமூன் சைஸை கொஞ்சம் குறைச்சிருக்கலாம்.
பிள்ளைங்க எல்லாம் இன்னொண்ணு கேக்குதுங்க..”
“நான் நிறையதான் செஞ்சிருக்கேன். எடுத்துக்குங்க..”
“ஆயாசம் போக்க பகவதி ஆன்ட்டியின் சூடான பாயாசம் குடிங்க..” என்று
மாதவன் அபிநயிக்க, மகிழ்ந்து போன பகவதி, அவன் கோப்பையை மீண்டும் நிரப்பினாள்.
‘டின்னர்’
முடிந்து, துப்புரவுப் பணியில் இளசுகள் மும்முரமாக இறங்க, பத்தே நிமிடங்களில் மேல்
மாடி சுத்தமாகி விட்டது.
“இனி தொடர்வது … ‘பல்சுவை நிகழ்ச்சி’, முதலில் இறை வணக்கம்.. வழங்குபவர்
திவ்யா…”, தொடர்ந்து நண்டு, சிண்டுகளின் ‘ரைம்ஸ்’, ‘முஸ்தஃபா’, ‘வெண்ணிலவே’, ‘மானா
மதுரை மாமரக் கிளையிலே’, ‘அகிலா அகிலா..’, இவற்றுக்கு விதம், விதமான
குதியல்கள், நெளியல்கள்..
ஒரு மூலையில் ‘ப்ளஸ்-டூ’ எழுதிய மாணவச் செல்வங்களின் பெற்றோர்
ஒரு தனி மாநாடு நடத்தினர்.
“எல்லாம்
குதியாட்டம் போடுதுங்க. எக்ஸாம் ரிஸல்டை
நெனச்சா பக்கு பக்குங்குது..”
என்றாள்
வள்ளி.
“நைன்ட்டி
பர்ஸென்ட் வாங்கினா கூட போறாது, நைன்ட்டி எய்ட்டாவது வாங்கணும்.. அப்பத்தான்
மெடிகல், எஞ்சினியரிங் பத்தி நெனச்சாவது பார்க்க முடியும்..” இது பார்வதி.
“அண்ணா
யூனிவர்ஸிடி இல்லேன்னாலும், ‘டோட்’லேயாவது மாதுவுக்குக் கிடைச்சா சரி..”
“அது மட்டும்
ஈஸியா என்ன? ’பேமென்ட் ஸீட்’டுக்கே நிறைய மார்க் வாங்கணும்..”
“ராப்பகலா
படிச்சாள் கொழந்தே..அவளுக்கு ‘மெடிகல்’ கெடைச்சே ஆகணும்..” இது
மேனகாவின்
அம்மா பகவதி.
“எக்ஸாம்
ஜுரம் இப்ப நமக்கெல்லாம் வந்துடுத்து.
நம்ம குழந்தைகள் ஒரு வழியா
‘ஸெட்டில்’
ஆனாத்தான் அது விடும்..”
“சப்பா சப்பா சர்கா சலே..” சிறுவர்களின்
கோரஸுக்கு டப்பாக்களும், தட்டுகளும், கரண்டிகளுமே தாள வாத்தியங்களாயின. ‘இனி பொறுக்க முடியாது’ என்ற நிலை வந்ததும்,
சமயோசிதமாக மகாதேவன் நன்றி நவில, ‘மூன் லைட் டின்னர்’ இனிதே
நிறைவேறியது.
கணபதி, மோனிஷ், மாதவன், சரவணன், அப்துல்
பெரும்பாலும் சேர்ந்தே
சுற்றினார்கள். திவ்யாவும், மேனகாவும் தம் பள்ளித் தோழிகளுடன்
சேர்ந்து கொண்டார்கள். கல்லூரிகளுக்குப்
படையெடுத்து, பிடித்த கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தார்கள். எழுதிய தேர்வுகளையும், எதிர்காலத்தையும் பற்றி
வாய் வலிக்கப் பேசினார்கள். ‘அப்ளிகேஷன்’ வாங்கப் போன சில கல்லூரி வாசல்களில்,
‘ஸீனியர்’களால் ‘ராகிங்’ என்ற பெயரில் வழிப்பறி செய்யப்பட்டு, பணமிழந்தார்கள்,
தொப்பியிழந்தார்கள்.
“இன்னும்
ரெண்டு காலேஜுக்குப் போக, கையிலே பணமில்லாம போச்சும்மா..”
“இது என்னடா
அநியாயம்? வேகாத வெய்யில்லே ‘ஹாட்’டையுமா கழட்டிக் குடுப்பீங்க?”
“கேட்டா, ‘வர
வருஷம் வட்டியும் முதலுமா நீங்க வசூல் செஞ்சுடுங்க’ன்னு சொல்லி சிரிக்கறாங்க
ஆன்ட்டி.. ஃப்ரெண்ட்ஷிப்புக்காக சந்தா
வசூலிக்கறாங்களாம்..”
எல்லா மதிப்பெண்களும் வந்து விட்டன. கணபதியும், மேனகாவும் ‘ஸ்கூல் டாப்பர்ஸ்
லிஸ்ட்’டில் இடம் பெற்றிருந்தனர். மோனிஷ்,
மாதவன் இருவரும் எண்பதுக்கு மேல் வாங்கியிருந்தனர். திவ்யா, அப்துல், சரவணன் மூவரும் சுமாராக
மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
“பார்வதியும்,
பகவதியும் எங்களுக்கு ‘ஸ்பெஷல் ஸ்வீட்’ தந்தாகணும்.. கணபதி! மேனகா! நீங்க டாக்டரானதும், எங்களுக்கெல்லாம் ஃபீஸை
குறைச்சுப்பேளோன்னோ?” என்றாள் மைதிலி.
“மாதவன்தான்
‘என்ட்ரன்ஸ்’லே நிறைய வாங்கிட்டானே! அவனுக்குக் கண்டிப்பா ‘எஞ்சினியரிங் ஸீட்’
கெடைச்சுடும்..” என்றாள் பார்வதி.
“சே! இந்த
மோனிஷ் கொஞ்சம் விளையாட்டைக் குறைச்சிட்டிருக்கலாம். ‘கட் ஆஃப் மார்க்ஸ்’ ‘ஃப்ரீ
ஸீட்’டுக்குப் பத்தாது..” என்றாள் மேரி.
“எங்க திவ்யா
அந்த கஷ்டமெல்லாம் குடுக்கலே. அவளுக்கு
‘காலேஜ் அட்மிஷன்’ கெடைச்சாலே போதும்..” என்றாள் பார்வதி. கணபதியும், திவ்யாவும் இரட்டைக் குழந்தைகள்.
ஆயிஷாவும்,
வள்ளியும் மௌனமாக இருந்தனர். கேட்டதற்கு
ஆயிஷா சொன்னாள்.
“இந்த
அப்துலும், சரவணனும் சொல்லிக்கும்படியாவா மார்க்கு வாங்கியிருக்குதுங்க?”
மருத்துவம், பொறியியல் இரண்டு நுழைவுத்
தேர்வுகளும் எழுதியிருந்த கணபதிக்கு, பொறியியலில் இடம் கிடைத்தும், அவன் மறுத்து
விட்டான். மருத்துவத்தில் சேர ‘கட்-ஆஃப்’
மதிப்பெண்களில் ஒன்று குறைந்து விட்டதால், இடம் கிடைக்கவில்லை.
“எனக்கு
‘மெடிகல்’லேதான் ‘இன்ட்ரஸ்ட்’, ஆன்ட்டி.. எல்லா இடத்துலேயும் ‘ட்ரை’ பண்றேன்..
ஏதாவது கிடைக்காதா?” என்றான் கணபதி.
“உனக்குக்
கிடைக்கலேன்னா, ஆருக்கு கிடைக்கும், கொழந்தே?” என்றாள் பகவதி.
“பாரத் அபார்ட்மென்ட்ஸ்” பெற்றோர்களின்
மனதில், மகிழ்ச்சி போய், மன உளைச்சல் குடியேறியது. முதலில் ஏதாவது கல்லூரியில் சேர்த்து விட்டு,
பிறகு ஏதாவது கிடைத்தால் மாற்றி விடலாம் என்று முடிவெடுத்தனர். எல்லோரும் சேர விரும்பும், நகரின் பிரபலமான
கல்லூரிகளிலிருந்து ஒருவருக்கும் அழைப்பு வரவில்லை. ஒரு நாள் சரவணன் சொன்னான்,
“எனக்கு
காலேஜ் ஸீட் கிடைச்சிடுச்சு, ஆன்ட்டி..
எல்லோரும்
அவனைப் பார்த்த பார்வையில், ‘எப்படி’ என்ற ஆச்சரியக் கேள்வி.
“’பாக்வர்ட்
கம்யூனிடி கோட்டா’லே..”
சரவணன்
அகன்றதும், அங்கு வந்த மேரி சொன்னாள்,
“இவங்க
‘பாக்வர்ட் கம்யூனிடி’ன்னு இத்தினி நாள் நமக்குத் தெரியாதில்லே?”
“வள்ளி
புருஷனுக்கு துபாய்லே எக்கச்சக்க சம்பாத்தியம்.
அவ கட்டறதெல்லாம் ‘ஃபாரின் ஸாரி’தான்.. இந்த ‘ஃப்ளாட்’ தவிர, சொந்த
ஊர்லேயும் அவங்களுக்கு ஒரு வீடு இருக்கு.. சரவணன் எப்பவுமே ஒரு இளவரசன் மாதிரி
‘ட்ரெஸ்’ பண்ணறான்.. ‘ஃபினான்ஷியலா’ இவ்வளவு ‘ஃபார்வார்டா’ இருக்கறவாளுக்கு,
‘பாக்வர்ட்’னு சாதி அடிப்படையிலே சலுகை..ஹூம்..” என்று நெடுமூச்செறிந்தாள்
பார்வதி.
“மாதவன்,
மோனிஷ், திவ்யா எல்லாருமே இவனை விட நிறைய மார்க் வாங்கியிருக்காங்க..
ஒருத்தருக்கும் இது வரைக்கும் வரலியே..”
“மாதவனுக்கு
‘பேமென்ட் ஸீட்’டாவது கிடைக்கும், சேர்ப்பீங்க இல்லே?” என்றாள் மேரி.
“அவன் ஒரே
பிள்ளையில்லையே! ரமா கல்யாணத்துக்கு ரெடியா நிக்கறாளே! அவளை எம்.எஸ்ஸி. படிக்க வெச்சாச்சு. கொஞ்சம் நல்ல இடமா பார்க்கணும்னா, கையிலே
கணிசமா வேண்டாமா?”
“நாமெல்லாம்
இந்த ‘ஃப்ளாட்’ வாங்கின கடனையே இன்னும் அடைச்ச பாடில்லையே!” அங்கலாய்த்தாள்
பார்வதி.
“எண்ணி எண்ணி
செலவு செய்யறோம்.. ரேஷன் கடைக்கு எல்லாரும்தான் படையெடுத்து, சாமான் வாங்கறோம்..
எல்லாத்துக்கும் க்யூவிலே நிக்கறோம்.. நம்ம தலையிலே ஏதாவது கிரீடம் இருக்கா
என்ன? பகவான் நம்மளை எந்த விதத்துலே
உசத்தியா வெச்சிருக்கார்னு எனக்குப் புரியலே..” என்றாள் பகவதி.
“பழைய
தலைமுறை செஞ்ச தப்புக்கு, இந்த தலைமுறை கஷ்டப்படுது.. நம்ம பிள்ளைங்களுக்கு
‘தீண்டாமை’ன்னா என்னன்னு தெரியுமா? என்றாள் மேரி.
செலவினங்களை சமாளிக்க சிறு குழந்தைகளுக்கு
‘ட்யூஷன்’ எடுக்கும் பொறுப்பை மேற்கொண்டிருந்தாள் மைதிலி. ஒரு நாள் குழந்தை அருணா தமிழ் படித்துக்
கொண்டிருந்தாள்..
“காந்திஜி
தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார்..”
“தீண்டாமை’ன்னா
என்ன ஆன்ட்டி?”, அருகிலிருந்த மோனிஷ் அன்று கேட்டது, மைதிலியின் நினைவுக்கு வந்தது.
“அந்தக்
காலத்துலே உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதின்னு பிரிச்சு வெச்சிருந்தாங்க. தாழ்ந்த ஜாதிக்காரங்களை இவங்க எதுக்கும்
சேர்த்துக்க மாட்டாங்க.. ஒரே குளத்துலே குளிக்க விட மாட்டாங்க. கிணத்துலே தண்ணி
எடுக்கக் கூட விட மாட்டாங்க.. கோயில்லே எல்லாம் உள்ளே விட மாட்டாங்க.. பெரிய
ஜமீன்தார்கள், இவங்களை கொத்தடிமை மாதிரி நடத்தினாங்க..’படிப்பு முக்கியம்’னு
இவங்களுக்கு யாருமே சொல்லிக் கொடுக்கலே.. நிறைய தலைவர்கள் பாடுபட்டு, இதையெல்லாம்
மாத்தினாங்க..”
“இப்ப
அப்படியெல்லாம் கிடையாதுதானே? யார் வேணும்னாலும் படிக்கலாம். குளிச்சு, ‘நீட்’டா
‘ட்ரெஸ்’ செஞ்சுகிட்டு, யார் வேணும்னாலும் கோயிலுக்குப் போகலாம்தானே?”
“முக்காவாசி
அப்படித்தான். எங்கேயாவது மூலைலே இருக்கற
சில கிராமங்களிலே, சிலர் இன்னும் மாறாம இருக்காங்க..”
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மாதவன்
கேட்டான்..
“அந்த மாதிரி
மாறாதவாளை தேடிப் புடிச்சு, பெரியவா திருத்தட்டுமே! எங்களை ஏன் ‘பனிஷ்’ பண்ணணும்? நானும், சரவணனும்
எத்தனை நாள் டிபன் பாக்ஸை மாத்திண்டிருக்கோம் தெரியுமா? ஜாதியைப் பத்தியெல்லாம் நாங்க நெனச்சேப்
பார்த்ததில்லே. அவா நம்மளை விட பணக்காரா.
அவாளை தாழ்ந்த ஜாதின்னு எதை வெச்சு முடிவு பண்ணறா? இந்தியாவை மதச் சார்பற்றதுன்னு சொன்னா போறுமா?
‘ஜாதி என்ன’ன்னுதானே முதல்லே கேக்கறா? ‘எல்லாரும் இந்தியத் தாயின் மக்கள்’னா,
‘ஜாதி ஸர்டிஃபிகேட்’ எதுக்கும்மா?”
”குழந்தைகளிலே
எது நோஞ்சானா, சீக்காளியா இருக்கோ, அதைத்தானே அம்மா இடுப்பிலே தூக்கி வெச்சுப்பா?”
“உண்மையாவே
‘வீக்’கா இருக்கற குழந்தையை தூக்கி வெச்சுக்கட்டும். ஜாதி அடிப்படைலே சலுகை கொடுத்து, ஒரு
குறையுமில்லாம புஷ்டியா இருக்கற சோம்பேறிக் குழந்தைகளைக் கூட இந்த அம்மா தூக்கி
வெச்சுண்டு, ரேஸ்லே முன்னாலே வந்த எங்களை ஒதுக்கி வெக்கறாளே, இது என்ன நியாயம்?”..
“ஸ்.. வள்ளி
ஆன்ட்டி கேட்டா தப்பா நினைச்சுக்கப் போறா.. போய் டிபன் சாப்பிடு..” என்று மாதவனை
அனுப்பி விட்டு, ட்யூஷனைத் தொடர்ந்தாள் மைதிலி.
மகன் பேச்சில் இருந்த நியாயம், அவள் மனதை நெருடிக் கொண்டே இருந்தது.
”யாரோ
படுத்தி வெச்சா. யாரோ கஷ்டப்பட்டா. படுத்தி வெச்சவாளும், பாடுபட்டவாளும்,
தண்டனையோ, சலுகையோ கிடைக்காம போய் சேர்ந்தாச்சு.
பல வருஷத்துக்கு முன்னாலே, தென்னை மரத்துலே தேள் கொட்டித்து. இப்போ வளர்ந்து நிக்கற பனை மரத்துலே நெறி
கட்டறது..” வருத்தத்திலும், சிரிப்பு
வந்தது மைதிலிக்கு.
சில நாட்களில், மோனிஷுக்கு நகரின் பெரிய
கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்து விட்டது.
மற்றவர்கள் பேசிக் கொண்டார்கள், “அவங்க மதத்தைச் சேர்ந்தவங்களுக்கு அங்கே
‘ப்ரையாரிடி’ கொடுக்கறாங்க…”
எல்லா
பல்கலைக் கழகங்களும் கைவிட்ட நிலையில், ஒரு வெளியூர் பல்கலைக் கழகத்திலிருந்து,
கணபதிக்கும், மேனகாவுக்கும் நேர்முகத் தேர்வுக் கடிதம் வந்தது. உற்சாகத்துடன் கிளம்பியவர்கள், தொங்கிய
முகத்துடன் திரும்பினார்கள். கிருஷ்ணன்
குட்டி சொன்னார், “இது கிடைக்கணும்னா, ஒரு லட்சம் சொர்ண புஷ்பம் வைக்கணுமாம்..”
“ஆயிரக்கணக்கா
‘அப்ளை’ பண்றவாளை, ‘வேணாம், இது வேஸ்ட்’டுன்னு தடுக்கணும் போலேயிருக்கு..” என்றார்
மகாதேவன் ஆத்திரமாக.
“இருக்கறவா
குடுக்கறா. நாம தடுத்தா எல்லாரும்
கேட்டுடுவாளா?” என்றார் ராகவன்.
“இனிமே
வைத்தியம் பண்ணிக்கணும்னா, கிழ டாக்டராதான் தேடணும்.. ஏன்னா, சின்னவாள்ளே,
உண்மையாவே திறமையாலே முன்னுக்கு வந்தவா யாருன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?” என்றாள்
பார்வதி.
அப்துலும் ஒரு கல்லூரியில் சேர்ந்து
விட்டான். இப்ராஹிம் சொன்னார்’
“சிபாரிசுங்க. அங்கே நம்ம மனுஷங்க
இருக்காங்க. அப்படியும், இங்கே அங்கே
திரட்டிக் கொடுத்துத்தான் சேர்த்தோம்.
பையன் செய்யப் போறது நம்ம வியாபாரம்தான்னாலும், படிப்பு போதும்னு விட்டுட
முடியுங்களா?”
“பாவம். மேனகா,
கணபதிக்கு இங்கே ஒரு காலேஜ்லேயிருந்து ‘இன்டர்வியூ’வுக்கு வந்தப்ப, அவங்க
வெளியூருக்குப் போயிட்டாங்க. அதுவும்
கிடைக்கலே, இதுவும் போச்சு.. அவங்க சில காலேஜுக்குத்தான் ‘அப்ளை’ செஞ்சாங்க..”
‘பாரத் அபார்ட்மென்ட்’ஸில் வரவர கலகலப்பு
குறைந்தது. முகங்களில் இறுக்கம்.
‘மூன்லைட் டின்னரில்’ மகிழ்ச்சியில் பளபளத்த கண்களில் ஏக்கம், அநுதாபம், பொறாமை,
அசூயை, அலட்சியம், இன்னும் ஏதேதோ உணர்ச்சிகள்..
“நான் பெரிய
ந்யூரோ ஸர்ஜனாகணும்..” என்று கணபதி சொன்னபோது, “குட். லட்சியத்தை விட்டுடாதே..”
என்று வாழ்த்திய வாய்கள், இன்று விமரிசிக்க ஆரம்பித்தன.
“கிடைச்ச
ஸீட்டையும் விட்டுட்டே. எல்லா
காலேஜுக்குமாவது அப்ளை செஞ்சிருக்கலாம் இல்லே?”
கணபதியின் இலட்சியத்துக்கு
‘அசட்டுப் பிடிவாதம்’ என்று பெயர் சூட்டப் பட்டது. அந்தக் காலனியின் தலை சிறந்த மாணவனும்,
மாணவியும் குற்ற உணர்வினால் குறுக ஆரம்பித்தனர்.
மேனகாவுக்கு ஒரு கல்லூரியில் இடம்
கிடைத்தது. விரும்பிய பிரிவு கிடைக்கவில்லை.
திவ்யா தபால் மூலம் படிக்க முடிவு செய்தாள்’ தையலும் கற்க ஆரம்பித்தாள்.
ஒரு நாள். ஒரு கல்லூரி முதல்வரை விடாப்
பிடியாய் போய் பார்த்தனர் கணபதியும், மாதவனும்.
முதல்வர் கேட்டார்..
“இட்ஸ் டூ
லேட். உங்களுக்கு நான் எந்த அடிப்படைலே
ஸீட் கொடுக்க முடியும்?”
“மோஸ்ட்
பாக்வர்ட் கம்யூனிடி’ங்கற அடிப்படைலே கொடுங்க ஸார்..”
முதல்வரின்
நெற்றி சுருங்கியது…”வாட் டூ யூ மீன்?”
“யெஸ். நாங்க லட்சம் லட்சமா பணத்தைக் கொடுக்க முடியாத,
முற்பட்ட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க.. அதாவது, இன்னிக்கு மிகவும்
பிற்படுத்தப் பட்டுள்ள சந்தர்ப்ப ஏழைகள் நாங்க..
தகுதி இருந்தும், விரும்பினது கிடைக்காம, கிடைக்கறதை விரும்ப வேண்டிய கட்டாயத்திலே
இருக்கறவங்க..”
முதல்வர் அவர்களை உற்று நோக்கினார். விரக்தியில் கனன்ற அக் கண்களில், அக்கினிக்
குஞ்சின் சிறு பொறிகள், அவர் கண்களுக்குப் புலப்பட்டன.
வெளியில் வந்த கணபதியும், மாதவனும் பேசிக்கொண்டனர், “நாம எஜுகேஷனல் லோனுக்கு அப்ளை செஞ்சு, பேமென்ட் ஸீட்லேயாவது கிடைச்ச காலேஜ்லே சேர்ந்துடணும்…..நம்மளை ஸ்டூடென்டா அடையறதுக்கு இந்த காலேஜுக்கெல்லாம் கொடுத்து வைக்கலே..அவ்வளவுதான்…”
சிரித்தனர்.
“படிப்பு முடிஞ்சதும் எப்படியாவது வேலை பார்த்து கடனை அடைச்சுடறோம்னு
சொன்னா, அப்பா ஏற்பாடு செய்வார்…” மாதவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.
இவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த பெரியவர், அருகில் இருந்தவரிடம்
சொன்னார், “இந்த காலத்துப் பசங்க ரொம்ப புத்திசாலிங்க.. ஆனா, சில பேருக்கு
ஏமாத்தங்களை தாங்கற சக்தியில்லே. வாழ்க்கையே பறிபோயிட்ட மாதிரி, குழம்பிப் போய்,
தப்பு தப்பா முடிவு எடுக்கறாங்க. இந்தப்
பசங்க மாதிரி தெளிவோட யோசிச்சா, வாழ்க்கையிலே பிரமாதமா முன்னுக்கு
வந்துடுவாங்க.. க்யூவிலே
நிக்கறவங்களுக்கு, காஃபி, டீ ஊத்திக் கொடுக்கறவன் கூட சந்தோஷமா பிழைக்கறான். சந்தோஷமா வாழ வழியா இல்லே?...”
“வாழ்த்துக்கள் தம்பிகளா! நீங்க
ரொம்ப நல்லா வருவீங்க..” வாயார வாழ்த்தினார்.
அவரை வணங்கிய கணபதி, மாதவன் கண்களில் பிரகாசமான ஒளி தென்பட்டது.
--------------------------------------------
Hello friends, Deservant students sometimes face disappointment, because they are deprived of opportunities they seek, due to various reasons. It doesn't necessarily mean that they are deprived of a bright, prosperous future too! When some doors are closed, so many other doors are open for them. Using their intelligence, they have to make use of the opportunities which are open for them and come out successful.
Hello youngsters! A very bright, prosperous future is awaiting you! All the very best!
Hello youngsters! A very bright, prosperous future is awaiting you! All the very best!
No comments:
Post a Comment