.jpg)

( 1985ம் ஆண்டு) அகில இந்திய வானொலிக்காக எழுதி வழங்கியவர்:
கௌரி கிருபாநிதி.
-------
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தை நோக்கி என் கார் சென்று கொண்டிருந்தது. மெல்லியதாக தூறல் போட்டுக் கொண்டிருந்தது. வழியில் கந்தசாமிச் செட்டியார் மகன் குமரன் கை காட்டினான். வண்டியை நிறுத்தினேன்.
"பாண்டி போறீங்களா ஸார்?"
"ஆமாம். ஏறிக்கோ..."
வழி நெடுகப் பேசிக்கொண்டே வந்தான். அவன் பேச்சில் தொண்ணூறு சதவிகிதம் தன் அப்பாவைப் பற்றிய குறைதான்.
"ஒரு வளர்ந்த பிள்ளையாவா என்னை மதிக்கறாரு? 'எங்கே போனே? என்ன செஞ்சே? எடுத்துகிட்டு போன பணத்துக்கு என்ன கணக்கு?', இப்படி ஒவ்வொண்ணுலேயும் தலையிடறாரு. நீங்களும் ஒரு அப்பாதான், ஷ்யாமுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கீங்க? அவனை நம்பி பிஸினஸையே ஒப்படைச்சுட்டு, நீங்க க்ருஷ்ணா, ராமான்னு ஒதுங்கியிருக்கீங்க. போற வழிக்கு புண்ணியம் தேடிக்கணும்னு உங்களுக்கு தோணுது. அவருக்கு அந்த மாதிரி எண்ணம் இருந்தாதானே?"...
"அந்த காலத்து மனுஷர். அப்படித்தான் இருப்பாரு. கேள்வி கேட்டா என்னப்பா? பதில் சொல்லிட்டுப் போயேன். அவர் என்ன மூணாம் மனுஷரா? உங்க அப்பாதானே?"...
"பசங்க 'ஸைக்காலஜி'யைப் புரிஞ்சுகிட்டு, அவங்களை 'அடல்ட்' மாதிரி நடத்தறதுக்குப் பெரியவங்களுக்குத் தெரியணும்.. எது நல்லது, எது கெட்டதுன்னு எங்களுக்குத் தெரியாதா? தொணதொணன்னு இப்படியா உயிரை எடுப்பாங்க? உங்களை மாதிரி 'ஃப்ரெண்டை'ப் பார்த்துக் கூட அவருக்கு புத்தி வரலியே? ஒரு பிள்ளையை எப்படி நடத்தணும்னு அவருக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க ஸார்..."
நகரின் மையப் பகுதியில் இருந்த பெரிய துணிக் கடையின் முன்பு காரை நிறுத்தினேன். 'பில் கௌண்டரில்' இருந்த செட்டியார், என்னை பார்த்து விட்டு எழுந்து வந்தார். எனக்கு நன்றி கூறி விட்டு, கௌண்டரில் அமரச் சென்றான் குமரன். இடையில் தன் தந்தையைப் பார்த்த அவன் பார்வையில், ஆயிரம் வாட்ஸ் உஷ்ணம் - ஜன்ம விரோதியின் கோபம் - தெரிந்தது. செட்டியார் காரின் அருகில் வந்தார்.
"வாங்க. ஒரு 'கூல் ட்ரிங்க்ஸ்' சாப்பிட்டுட்டு போகலாம்..."
"வேணாம் செட்டியார்.. நல்லவேளை தூறல் விட்டுருக்கு. நான் கோயில், ஆசிரமம் எல்லாத்துக்கும் போகணும். ஒரு அஞ்சு நிமிஷம் இப்படிக் காரிலே உட்காருங்க. உங்களோட கொஞ்சம் பேசணும்"...
"என்னங்க விஷயம்?" என்று கேட்டவாறே, செட்டியார் என்னருகில் அமர்ந்தார்.
"ஒரு விஷயம், சொன்னா தப்பா நினைக்காதீங்க செட்டியார். உங்க பிள்ளையை கொஞ்சம் விட்டுப் பிடிங்க. ரொம்பக் கெடுபிடியா இருக்காதீங்க..."
"ஏன்? என்னைப் பத்திக் குறைப் பட்டுக்கிட்டானா? கெடக்கிறான் விடுங்க வெத்துப் பய..." என்றார்.
"அதுக்கில்லே. நாம இப்படியெல்லாம் கஷ்டப் பட்டு சம்பாதிக்கறது நம்ம பிள்ளைங்களுக்காகத்தானே? இவ்வளவும் செஞ்சுட்டு, அவங்க வெறுப்பையும் நாம ஏன் சம்பாதிச்சுக்கணும்?"
"அந்தப் பயலைப் பத்தி உங்களுக்குத் தெரியாதுங்க. எங்க தகப்பனார் நின்னுக்கிட்டிருந்தா, நாங்க உட்கார மாட்டோம். திமிர் பிடிச்ச பய, என் எதிரிலேயே சிகரெட் பிடிக்கறான். தண்ணி வேறே அடிக்கறானாம். நேர்மை இருக்கற இடத்துலேதானே, பணிவும் இருக்கும்? இவங்ககிட்டே எல்லாம் எப்படிங்க இருக்கும்? லகான் எங்கிட்டே இருக்கறப்பவே, இவன் இந்த ஆட்டம் ஆடறான்.. என் உசிரு இருக்கற வரைக்கும், நான் கேள்வி கேட்டுகிட்டுத்தான் இருப்பேன். அப்புறமா அவன் எக்கேடும் கெட்டுப் போகட்டும். இந்த மாதிரி பசங்களை பிச்சையெடுக்க வைச்சாதான், புத்தி வரும்..." என்றார்.
அடேயப்பா! கோபத்திலும், பிடிவாதத்திலும் அப்பாவும், பிள்ளையும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை. தன் பிள்ளை கஷ்டப் படுவதைப் பார்த்து, ஒரு தகப்பனால் சந்தோஷப்பட முடியுமா? அப்படி சந்தோஷப் படுபவன், ஒரு தந்தையாக, மனிதனாக இருக்க முடியுமா? தவறு செய்யும் மகனைப் பக்குவமாகத் திருத்துவதை விட்டு விட்டு, இது என்ன விரோத பாவம்? அறியாமையில் கிடந்து உழலும் செட்டியாரைப் பார்த்தால், பாவமாக இருக்கிறது. ஒரே மகனின் அன்பை, இப்படி முழுவதுமாக இழந்து விட்டாரே!
என் பிள்ளை ஷ்யாமின் சிரித்த முகம் என் நினைவுக்கு வருகிறது.
பத்து வயதில், தன் தாயை இழந்து விட்டான் ஷ்யாம். தொழிலதிபரான எனக்கு, என் பிள்ளையுடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. சிறு வயதில் வறுமையில் வாடிய நான், 'நான் பட்ட துன்பங்களின் நிழல் கூட, என் மகன் மேல் படிந்து விடக் கூடாது; அவன் முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமே பார்க்க வேண்டும்' என விரும்பினேன். மறுமணத்தைப் பற்றி, எண்ணிக் கூடப் பார்க்கவில்லை. என் தொழிலின் வளர்ச்சியில், என்னை கரைத்துக் கொண்டேன். உடலும், மனமும் களைத்து, உறக்கத்தில் என்னை உடனே ஆழ்த்தும் வண்ணம், உழைத்தேன்.
வீட்டு வேலைகளுக்கும், ஷ்யாமை கவனித்துக் கொள்ளவும், வீட்டில் நிறைய வேலைக்காரர்கள் இருந்தனர். தனிமை என் மகனை வாட்டக் கூடாதென்று, அவன் விரும்பியபோதெல்லாம், நண்பர்களை வரவழைத்துக் கொள்ளும் உரிமையை அவனுக்கு அளித்தேன். அவன் விரும்பியதெல்லாம், அவனுக்கு உடனடியாகக் கிடைக்கச் செய்தேன்.
என் மகன் எனக்கு ஏமாற்றமளிக்கவில்லை. படிப்பில் முதன்மையாகத் திகழ்ந்த அவன், எம்.காம். முடித்ததும், என் பொறுப்புகளை அவனிடம் ஒப்படைத்து விட்டேன். கொஞ்ச காலம் அவனுக்குத் தொழில் விஷயங்களில், ஆலோசனைகள் வழங்கி வந்தேன். ஒரு நாள் ஷ்யாம் சொன்னான்.
"அப்பா! நீங்க வேண்டிய மட்டும் உழைச்சுட்டீங்க. இனிமே உங்களுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கறது என்னோட 'ட்யூடி'. உங்களுக்குப் பிடிச்ச மாதிரி உங்க 'லைஃபை ஸ்பெண்ட்' பண்ணுங்க. எதைப் பத்தியும் இனிமே கவலைப் படாதீங்க. எல்லாத்தையும் நான் கவனிச்சுக்கறேன்..."
என் தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட மகனை பெருமிதத்துடன் பார்த்தேன்..
அவனை நான் என்றுமே தோழனாகத்தான் நடத்தியிருக்கிறேன்.
கட்டுமானப் பொருள்களின் உற்பத்தி, விற்பனையில் தொடங்கப் பட்ட என் தொழில், பெரிய கட்டிடங்களின் 'காண்ட்ராக்ட், ரியல் எஸ்டேட் பிஸினெஸ்' என்று வளர்ந்து கொண்டே வந்தது. தொழில் நிர்வாகத்திலும், என் மகன் எனக்கு ஏமாற்றமளிக்க வில்லை. வேறு சில ஊர்களிலும், எங்கள் அலுவலகத்தின் கிளைகள் திறக்கப் பட்டன. தொழிலில் இலாபம்
அதிகரித்தது.
ஒரு நாள், என்னிடம் பல வருடங்கள் வேலை பார்த்த 'பொன்னம்பலம்' என்பவரிடமிருந்து, எனக்கு ஒரு கடிதம் வந்தது. "நாணயமாக வேலை செய்து வந்த நான், அநியாயமாகக் குற்றம் சுமத்தப்பட்டு, வேலை நீக்கம் செய்யப் பட்டுள்ளேன். தாங்கள் கருணை கூர்ந்து, எனக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்க வழி செய்ய வேண்டும்" என்று எழுதியிருந்தார். ஷ்யாமிடம் இது பற்றி விசாரித்தேன்.
"சிமெண்ட் ஸப்ளைக்காக டெண்டர் கேட்டிருந்தோம். லோயஸ்ட் டெண்டர் சம்பந்தமான ஃபைல் காணாமப் போயிடுச்சுன்னு சொல்றார். இவர் லஞ்சம் வாங்கிக்கிட்டு, இன்னொரு கம்பெனியோட டெண்டரை 'அக்ஸெப்ட்' பண்ணிக்கிட்டார்..."
"யாரு? பொன்னம்பலமா இப்படி செஞ்சார்?"
"ஆமாம்ப்பா. பல வருஷமா வேலை செய்யறாரேன்னு அவரை நம்பி, ரொம்ப பொறுப்பான வேலையை கொடுத்தோம். மனுஷன் முன்னே மாதிரி இல்லே. ரொம்ப மாறிப் போயிட்டார்ப்பா. அவருக்கு என்ன பணக் கஷ்டமோ? ஆனா, அதுக்காகப் பரிதாபப் பட்டு, நாம நஷ்டப் பட முடியாதே!..."
இன்னும் சில நாட்கள் கழித்து, பொன்னம்பலத்திடமிருந்து இன்னொரு கடிதம் வந்தது. "யாரோ பெரிய மனிதர் சிபாரிசு பெற்ற ஒரு சின்னப் பையனுக்கு, என் வேலையைக் கொடுத்து விட்டார்கள். எனக்குக் கல்யாணத்துக்குப் பெண் இருக்கிறாள். நான் ரொம்ப கஷ்டப் படுகிறேன்..." என்று எழுதியிருந்தார்.
''அவரோட ஏமாத்து வேலை அம்பலமாயிடுச்சேன்னு ஆத்திரம்ப்பா அவருக்கு. அவருக்குச் சேர வேண்டியதெல்லாம் 'ஃபுல்லா ஸெட்டில்' பண்ணிட்டேன். அதைத் தவிர, போனாப் போகுதுன்னு, அவர் பொண்ணு கல்யாணத்துக்காகவும், பத்தாயிரத்துக்கு ஒரு 'செக்' அனுப்பியிருக்கேன்.." என்றான் ஷ்யாம்.
பொன்னம்பலம் இப்படி மாறி விட்டதை எண்ணிக் கசப்பாக இருந்தது எனக்கு. பாவம், ஷ்யாம் எத்தனை பிரச்னைகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது?
பத்து நாட்களாக ஷ்யாமின் காரைக் காணோம். டிரைவரும் வரவில்லை. ஷ்யாம் சொன்னான்,
"கார் ரிப்பேர். 'காரேஜ்'லே இருக்கு. டிரைவரோட அப்பாவுக்கு,'ஹார்ட்'லே
'மேஜர் ஆபரேஷன்' செய்யணுமாம். லீவ் வேணும், செலவுக்குப் பணம் வேணும்னு அழுதான். பாவமா இருந்திச்சு. மூணு மாசம் லீவும், இருபதாயிரம் பணமும் கொடுத்தனுப்பினேன். இன்னும் சில பேரும் அவனுக்கு உதவியிருக்காங்க..."
"என் பிள்ளையிடம் 'பிஸினஸ்' மூளை மாத்திரம் இல்லை, கருணை உள்ளமும் இருக்கிறது. இவ்வளவு வளர்ந்த பின்னும், என்னிடம் அவன் காட்டும் மரியாதையில் குறைவில்லை. நாள் கிழமைகளில் என்னை வணங்கத் தவறுவதில்லை அவன். ஒரு நல்ல பெண் அவனுக்கு மனைவியாக அமைந்து விட்டால், எனக்கு வேண்டியது வேறெதுவுமில்லை. என் வாழ்க்கை பரிபூரணமாகி விடும்"..கர்வம் கலந்த மகிழ்ச்சி என் மனத்தில் நிறைந்திருந்தது.
மணக்குள விநாயகர் கோயிலருகில், காரை நிறுத்தினேன். உள்ளே பிரதட்சிணம் செய்து விட்டு வரும் போது, சன்னிதி எதிரில் கண்களை மூடிக் கொண்டு நின்றிருந்த பிரகாசத்தைப் பார்த்தேன்.
பிரகாசம் என் ஆன்மீக நண்பர். அவர் குடும்பம், பொருளாதார நிலை, எது பற்றியும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர் ஒரு பக்தர்; தமிழறிஞர்; தெய்வீக நூல்களைக் கரைத்துக் குடித்தவர், இவ்வளவுதான்.
கோயில்களிலும், அரவிந்தர் ஆசிரமத்திலும் பல முறை சந்தித்துப் பேசியிருக்கிறோம். எங்கள் பேச்சு, இந்த ஆன்மீக வட்டத்தைக் கடந்ததில்லை.
தரிசனம் முடித்து வெளியே வந்தோம். கோயிலிலிருந்து ஆசிரமத்துக்கு நடந்து சென்று விட்டுத் திரும்புவது என் வழக்கம். பேசிக் கொண்டே நடந்தோம். பிரகாசத்தின் முகத்தில் கப்பியிருந்த சோகம், என்னை அது பற்றி விசாரிக்கச் செய்தது. முதன்முறையாகத் தன் குடும்பம் பற்றிச் சொன்னார். தன் பிள்ளையைப் பற்றிக் கூறும் போது கதறி விட்டார்.
"நான் எப்படிங்க சந்தோஷமா இருக்க முடியும்? இன்னிக்கு என் பிள்ளை ஜெயில்லே இருக்குறான். ஏதாவது சுதந்திரப் போராட்டத்துக்காக போயிருந்தான்னா, பெருமைப் பட்டுக்கலாம். காரை ஏத்தி, பச்சைப் புள்ளையைக் கொன்னப் பழியை சுமந்துகிட்டு இல்லே போயிருக்கான்?"
"என்ன சொல்றீங்க?"
"படிப்பு வரலேன்னு, அவனை டிரைவர் வேலைக்கு அனுப்பினேன். அவனோட முதலாளி தான் செஞ்ச தப்பை, இவன் தலையிலே சுமத்தி, ஜெயிலுக்கு அனுப்பிட்டான். குள்ள நரித்தனமா எப்படியெல்லாம் பேசி, என் பிள்ளையை ஏமாத்தியிருக்கான் தெரியுமா? கண் துடைப்புக்கு இருபதாயிரம் பணம் வேறே கொடுத்திருக்கான். இத்தனை நாள் நாங்க கட்டிக் காத்த குடும்ப கௌரவம், மானம், மரியாதை...இதெல்லாம் இப்போ காத்துலே போயிடுச்சே, அதையெல்லாம் இந்தப் பணமா திருப்பிக் கொடுக்கப் போகுது?..."
"டிரைவர், இருபதாயிரம்..." சொரேலென்றது எனக்கு.
"ஜெயில்லேயிருந்து திரும்பி வந்ததும், திரும்பவும் வேலைக்குச் சேர்த்துக்கறானாம். ஏன்? இன்னும் ஏதாவது கொலையே செஞ்சுட்டு, என் பிள்ளையை மாட்டி விட்டு, தூக்குத் தண்டனை வாங்கித் தரவா? விபத்து நடந்த அன்னிக்கு என் பிள்ளை லீவிலே, வீட்டிலேதான் இருந்தான். இதை நிரூபிக்க எங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லாம போயிடுச்சு. என் அருமைப் பிள்ளை இப்போ ஜெயில்லே...இதை நெனச்சு, நெனச்சு நெஞ்சு ரணமா
ஆயிடுச்சு..."
என் நெஞ்சையும் யாரோ வாள் கொண்டு அறுக்கிறார்கள். நிதானப் படுத்திக் கொண்டு விவரங்களை விசாரித்தேன். நிச்சயமாகத் தெரிந்து விட்டது, இவர் சோகத்துக்குக் காரணம் என் மகன்தான்.
ஆசிரமத்தை அடைந்து விட்டோம். தியான மண்டபத்தில் தியானம் செய்ய அமர்ந்தோம். மனம் ஒன்ற வில்லை. எதிரே அமர்ந்திருந்த பிரகாசத்தின் கண்களிலிருந்து, கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. உணர்ச்சிக் குமுறல்கள், என் நெஞ்சை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.
"எப்பேர்ப் பட்ட வஞ்சகம்? என்ன நடிப்பு? என்னையே முட்டாளாகி விட்டானே! அவன் சிரிப்பு, போலி மரியாதை, உண்மையெனத் தோன்றும்படி அவன் அவிழ்த்து விடும் கட்டுக் கதைகள்...பொன்னம்பலத்தின் கண்ணீர்க் கடிதங்கள் உண்மையானவையோ? இவன் செய்த எந்தத் தவற்றை மூடி மறைக்க, அவன் பொன்னம்பலத்தை வேலை நீக்கம் செய்தானோ? நேர்மையின் அஸ்திவாரத்தின் மேல், நான் கட்டிய தொழிற் கோட்டை, இன்று அதர்மத்தின் துணையுடன் வளர்ந்து கொண்டிருக்கிறதா?
அன்றொரு நாள், கண்ணீரோடு வாசலில் வந்து கெஞ்சிய இளம் பெண்ணை, கூர்க்காவை விட்டுத் துரத்தினானே, அதற்குப் பின்னால் என்ன கண்ணீர்க் கதை இருக்கிறதோ?
நான் எங்கு தவறு செய்தேன்? பெரும்பாலும் அவனைச் சூழ்ந்து நின்ற நண்பர்களின் கூட்டத்தில், ஒவ்வொருவனும் எப்படிப் பட்டவன் என்று நான் அறிந்து கொண்டிருக்க வேண்டுமோ? அவன் பெற்ற அறிவை, குறுக்கு வழியில் அவன் உபயோகித்துக் கொண்டிருப்பதற்கு, யார் காரணம்?
வாழ்வின் சூத்திரங்கள், எல்லோருக்கும் ஒரே விதமாகப் பொருந்துவதில்லை. அனைவருக்கும் சரியான விடையை அளிக்காமல், அவை மனிதருக்கு மனிதர், முரண்பட்டு நிற்கின்றன. ஒவ்வொன்றிலும் தலையிடுவது தப்பென்றால், என்னைப் போல் ஒரேயடியாக ஒதுங்கி விட்டதும் தப்போ? காலம் கடந்த ஞானம்... இப்போது நான் கௌரவமாக ஒதுக்கப் பட்டு விட்டதை உணர்கிறேன். இனி நானே விரும்பினாலும், விட்ட இடத்தைத் திரும்பப் பிடிக்க முடியுமா? அவன் பவ்ய முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டு, உண்மை முகத்துடன் என்னை எதிர்த்தால், நான் என்ன செய்வேன்? எது சரி? எது தவறு? ஒன்றும் புரியவில்லை. 'என் வாழ்க்கை வெற்றிகரமானது' என்று எண்ணியிருந்தேன். 'நானும் ஒரு விதத்தில் தோல்வியைத்தான் தழுவியிருக்கிறேன்' என்று மட்டும் புரிகிறது.
பிரகாசத்தின் குடும்பத்துக்கு இழைக்கப் பட்ட கொடுமைக்குப் பரிகாரம் செய்யும் திறன் எனக்கு வருமா? இல்லை, நான் யாரென்பதை அவரிடம் வெளிப் படுத்தி, அவர் சாபங்களை அள்ளி வீசினால், அதை ஏற்கும் உரமாவது என் நெஞ்சுக்கு உண்டா?
'நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி..." நான் படித்த பாரதியாரின் பாடல் வரிகள் என்னைப் பளீரென்று அறைகின்றன.
இல்லை, இன்று என்னால் முடியவில்லை. ஆனால், என்னை திடப் படுத்திக் கொண்டு, நான் இதற்கெல்லாம் ஏதாவது செய்துதான் ஆக வேண்டும். கோழையாகவே ஒரு நாள் மண்ணில் புதைந்து போகக் கூடாது... கடவுளே! எனக்கு வலிமையைக் கொடு..எனக்கு வழி காட்டு..."
அரவிந்தரின் சமாதியை வலம் வந்தோம். கண்ணீர்க் கரையிட்டிருந்த முகத்துடன் நின்றிருந்த பிரகாசத்தை, நேருக்கு நேர் காண முடியாமல், என் கண்கள் கூசின.
இந்த சமயத்தில், என் துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு, எனக்கு ஆறுதல் கூற, ஆலோசனை வழங்க, எனக்குத் தாய், தந்தையும் இல்லை, தாரமும் இல்லை. அனைவரையும் இழந்து விட்ட நான், அந்த இழப்பு என் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை, இப்போது பரிபூரணமாக உணர்கிறேன். இவ்வுலக பந்தங்களிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு, ஆன்மீகத்தில் கரைந்து விட்டால், அமைதியை அடையலாம் என்று நினைத்தேன். அந்த அமைதி, கானல் நீர் போல் நான் நெருங்க நெருங்க, என்னை விட்டு விலகி ஓடிக் கொண்டிருக்கிறது.
என் மனைவி உயிருடன் இருந்திருந்தால், நான் இவ்விதம் ஒதுங்க அனுமதித்திருப்பாளா? பிள்ளையின் நடவடிக்கைகளை, அவன் நண்பர்களை, அவன் மனத்தின் ஆழத்தைப் பற்றி, அறியாமல் இருந்திருப்பாளா? எனக்கும், அவனுக்குமிடையில், ஒரு பாலமாக இருந்து செயல் பட்டிருக்க மாட்டாளா? அறிவிற் சிறந்த என் மகனின் உள்ளத்தில், மனிதத்தன்மையையும், ஒழுக்கத்தையும் ஓரளவுக்காவது விதைத்திருக்க மாட்டாளா?
என் மகனை விட்டு, மனத்தளவில் நான் விலக ஆரம்பித்ததும், திடீரென்று என் தனிமை என்னைத் தீவிரமாகத் தாக்குகிறது. மனைவியைப் பற்றி நினைத்ததும், என் கண்கள் குளமாகின்றன.
"எனக்குத் துணையாய், தோழியாய், தாயாய், மந்திரியாய் ...இருந்திருக்க
வேண்டிய நீ, என்னை அநாதையாக்கி விட்டு, ஏன் மறைந்தாய்?"
அரவிந்தரின் சமாதியில் மண்டியிட்டுத் தலை வைத்து வணங்கும் போது, என் கண்ணீர்ப் பூக்கள் சமாதியை அர்ச்சிக்கின்றன.
எதிரே அலங்கரித்து வைக்கப் பட்டிருக்கும் அழகான மலர்க் கொத்துகள், அமைதியிழந்த என் உள்ளத்துக்கு, சற்றே ஆறுதல் அளிக்கின்றன.
----------------------------------
Hello friends, Read the story?
I dedicate this story to Sri Aravindhar and the Divine Mother of Pondicherry.
Bhgawad Gita says, 'Parivarthan sansaar kaa niyam hey'
('maatrangaL ulagin niyadhi'). Our life style, habits, social status, amenities, comforts, expectations, requirements, desires...all are changing. Do they help bringing happiness, solace and contentment to the human mind?
Childhood is a blessing, mostly...(there are exceptions). Adulthood has always been a challenging one. Which is right and which is wrong? Our mind gets confused at times. There is no common formula which is applicable to each and everyone. Wisdom, will-power, hard work, virtues and God's blessings...if we surrender ourselves at the lotus feet of God, He will pave our way..we'll get some mental solace.
Great people, poets and elders have emphasized this point in various ways. Thirukkural which has got world-wide recognition says, "piravip perunkadal neendhuvar, neendhaar iraivanadi sEraadhaar" (Those who seek shelter at the feet of God will easily cross the ocean of this 'janma', others will find it very difficult).
Gopalakrishna Bharathiyar says, "Bhavasaagaram karaiyEralaam"
(By worshipping the feet of God). So many such examples are there.
More things are wrought by prayer than this world dreams of. The paths and the Divine Guides we choose may be different, but the destination is one and the same.
கவிஞர் கண்ணதாசனின் நயமிகு பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன,
"பால் மணக்கும் பருவத்திலே உன்னைப் போல் நானிருந்தேன்,
பட்டாடைத் தொட்டிலிலே சிட்டுப் போல் படுத்திருந்தேன்,
அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா,
உன்னுடன் ஆடி வர உள்ளமே பாடுதடா...
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
(சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ}
மீண்டும் சந்திப்போம்...
.jpg)