Wednesday, 19 November 2014

கண்ணுக்குத் தெரியாத முதலீடு (INVISIBLE INVESTMENT)

நண்பர்களே!  உங்க தோழி சிக்கூ உங்களை சந்திக்க திரும்ப வந்திருக்கேன்.  நாம சந்திச்சு ரொம்ப நாளாச்சு இல்லே?  ஒரு நல்ல இடத்துலே, புதுசா ஒரு வீடு, ஸாரி, கூடு கட்டியிருக்கேன்.  அதான் ரொம்ப 'பிஸி'.  நானும் எறும்பு  மாதிரி சுறுசுறுப்புதான்.  பாருங்க, இந்த எறும்புகள், மழைக்காலத்துக்கு சாப்பாட்டை எப்படி சேர்த்து வைக்குது?  மனுஷங்களும் சம்பாதிக்கறாங்க, சேர்க்கறாங்க, சொத்து வாங்கறாங்க, எதுலேயாவது முதலீடு செய்யறாங்க.  நிறைய 'பணம்' சம்பாதிச்சாதான் முதலீடு செய்ய முடியுமா?  தேவையில்லே.  அதுக்கு வேறே வழிகளும் இருக்கு.  பெரியவங்க சொல்லியிருக்காங்க, "வெறும் கை என்பது மூடத்தனம், பத்து விரல்களும் மூலதனம்..."

பல வருஷங்களுக்கு முன்னாலே, என் தோழி குக்கூ, அதான் கௌரி, இது சம்பந்தமா ஒரு கதை எழுதி, ரேடியோலே வாசிச்சாங்க.  அதுலே "கண்ணுக்குத் தெரியாத முதலீடு"ன்னு எதை சொல்றாங்க?  படிச்சு பார்த்து தெரிஞ்சுக்கலாமா?
               
                       

                    கண்ணுக்குத் தெரியாத முதலீடு
                         (INVISIBLE INVESTMENT}
          (WRITTEN AND PRESENTED THRO’ AIR BY MRS. GOWRI KRUPANIDHI)
                                ……………………
     கிழவியின் கண்களில் கண்ணீர் கரை கட்டியிருந்தது.  குருவி போல் சற்றே திறந்திருந்த வாயில் புன்சிரிப்பு.
“பட்டுப் பாவாடை, சட்டை, கழுத்தில் காசு மாலையும், முல்லையரும்பு வைத்து தைத்த சடையுமாக, சிறுமி கமலம் குதித்து குதித்து ஆடுகிறாள்.  காவிரி ஆற்று மணலில், கால்கள் புதையப் புதைய ஓடுகிறாள்…”

     அரைகுறையாக மூடிய கண்களுக்குள்ளே தெரிந்த இனிமையான பழைய காட்சிகள், திடீரென்று கலைகின்றன.  கிழவியின் கண், மூக்கு, உதடு என்று மாறி மாறி ஓர் ஈ வந்து உட்கார்கிறது.  அதை விரட்டப் பார்த்து, முடியாமல், கிழவி முகத்தை மூடிக் கொள்கிறாள்.

     கையில் பால் டம்ளருடன் வராந்தாவுக்கு வரும் ரத்னா, கிழவியின் தலையைத் தாங்கி உட்கார வைத்து, பாலைத் தருகிறாள்.  மீண்டும் படுக்க வைத்து விட்டு, அருகிலிருக்கும் ‘பெட் பானை’ சுத்தம் செய்ய எடுத்துச் செல்கிறாள்.  இரக்கம் ததும்பும் விழிகளுடன் மருமகளையே கவனித்துக் கொண்டிருக்கும் கிழவியின் கண்களில் கண்ணீர்.  மேசை விசிறியை கிழவியின் முகத்துக்கு நேராக திருப்பி வைத்துவிட்டு, ரத்னா செல்கிறாள்.

        இரண்டு வருடங்கள் முன்பு வரை அவள் கமலம்மா.  அந்த வீடு முழுக்க வளைய வந்து, நடுங்கும் விரல்களால், நூறு வேலைகள் செய்தவள்.  யார் எத்தனை மணிக்கு வந்தாலும் முகம் சுளிக்காமல், அன்புடன் உணவு பரிமாறியவள்.  பேரன், பேத்திக்கு சலிக்காமல் கதை சொன்னவள்.  ‘உதவி’ என்று யார் கேட்டாலும், சளைக்காமல் செய்தவள்.  மருமகளை மகளாக பாவித்தவள்.

     கமலம்மா நோய்ப் படுக்கையில் விழுந்து, கால்களும் பலமற்றுப் போய், தொய்ந்து விட்ட நிலையில், தன் காரியங்களுக்கே அவள் மற்றவரை எதிர்பார்க்க வேண்டி வந்தது.  இயற்கை உபாதைகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைந்து விட்டபின், ஒரு நர்ஸ் மூலம் அவளுக்கு ஒரு பையுடன் இணைக்கப்பட்ட ‘ட்யூப்’ பொருத்தப்பட்டது.

     அந்த வீட்டின் முன்னால் ஒரு வராந்தா, அடுத்து ஒரு சிறிய ஹால், பின் சமையலறை, அவ்வளவுதான்.  அந்த ஹாலில்தான் அனைவரும் படுக்க வேண்டும்.

     ஒரு நாள் அவள் மகன் மாதவன் மனைவியிடம் கத்தினான், “உழைச்சு சலிச்சு வீட்டுக்கு வந்தா, நிம்மதியா உட்கார்ந்து சாப்பிட முடியலே, ராத்திரி தூங்க முடியலே..நாத்தம் சகிக்கலே..”
ரத்னா அவனிடம் மன்றாடிப் பார்த்துத் தோற்றுப்போனாள். கமலம்மாவின் உறைவிடம் வராந்தாவுக்கு மாற்றப்பட்டது.  சிலரைத்தவிர, எல்லோருக்கும் அவள் ‘கிழவி’ அல்லது கிழமானாள்.

     வராந்தாவில் கிழவிக்கு அருகில் ஒரு ‘டேபிள் ஃபான்’. ஒரு சிறிய பக்கெட் தண்ணீர், குவளை, குடிக்கத் தண்ணீர், ‘பெட் பான்’, ஒரு புடவை ‘ஸ்க்ரீன்’.

     ஆரம்பத்தில் ஒரு நிமிடம் பேருக்கு நின்று, அம்மாவைப் பார்த்துவிட்டுச் சென்ற மாதவன், நாளாக ஆக, உள்ளே நுழையும்போதே, ஸ்க்ரீனை இழுத்து விட்டு, அம்மாவைப் பார்ப்பதையே தவிர்த்து உள்ளே போக ஆரம்பித்தான்.  அவன் உள்ளே சென்றதும் ரத்னா வெளியே வந்து, ஸ்க்ரீனை விலக்கி விடுவாள். கிழவி கண்களில் நன்றி பொங்கும்.  எதிரே வாசல், ‘க்ரில்’ ஜன்னல் வழியாகத் தெரியும் பறவைகள், வானம், விளையாடும் குழந்தைகள், இவை கிழவியின் தனிமைக்கு மருந்து.  வேடிக்கை பார்க்க சௌகரியமாக ரத்னா அவளைச் சற்று நகர்த்தி உட்கார வைப்பாள்.  மற்ற நேரங்களில் படுக்கைதான், அரைக்கண்கள் மூடிய நிலையில், கண்களில் நீருடன், சமயங்களில் பொக்கை வாய்ப் புன்னகையுடன்.

     கல்யாணமான பேத்தி சுமதியே ஒரு முறை தாயிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா இது? பாட்டிக்கு எப்பப் பார்த்தாலும் அழுகை இல்லே சிரிப்பு. வர வர அவ பேசறது எதுவுமே புரியலே. இப்படித் தானும் கஷ்டப்பட்டு, மத்தவங்களையும் கஷ்டப் படுத்தறாளே…”

“பாட்டி ஆசை, ஆசையா செஞ்சதெல்லாம் மறந்துட்டியா? நீயே இப்படிப் பேசறியே! நாளைக்கு எனக்கே ஒண்ணுன்னாலும், இப்படித்தான் பேசுவியா?”

     கிழவிக்கு கண் பார்வை மங்கினாலும், காது கேட்கிறது.  வாழ்க்கை நிகழ்ச்சிகள் அவ்வப்போது மனத்தில் திரைப்படம் போல் வந்து போகின்றன. மகிழ்ச்சியோ, துக்கமோ எதுவானாலும், கண்கள் கரகரவென்று நீரைப் பொழிகின்றன
.
“விளையாட்டுச் சிறுமி கமலம் கல்யாணமாகி வீடு, தோட்டம், மாடு, கன்று என்று கட்டியாண்டது, செத்துப் போன கணவரின் கடந்தகால லீலைகளால் கடனாளியாகி, நடுத்தெருவில் நின்றது…”

     எத்தனை வீடுகளின் அடுப்படிகளைப் பார்த்து விட்டாள்?  வாழ்ந்து கெட்டதால், வார்த்தைகளையும், ஓநாய்ப் பார்வைகளையும் பொறுக்க முடியாமல் விருட்டென்று விறைத்துக் கொள்ளும் மனதை, துணி மாதிரி சுருட்டி உள்ளே திணித்துக் கொண்டு, கடமையே உயிர் மூச்சாய், மாதவனை வளர்த்து ஆளாக்கிய காலங்கள்....அந்த நினைவுகளே சுட்டெரிக்கின்றன.  கண்களின் கண்ணீர் கிழ மனதின் உஷ்ணத்தினால் சூடாகி வழிகிறது. தொண்டைக் குழியிலிருந்து ஒரு விம்மல் வெடிக்கிறது.

     ரத்னாவின் பெரியம்மா வந்திருக்கிறாள், “இதென்னடி ரத்னா, இப்படி ஒரு கஷ்டம் உனக்கு?  உன் மாமியாரைப் பார்த்தா பகீர்ங்கறது.  அரைக்கண் தூக்கமும், கனாக் கண்டு அழறதும், சிரிக்கறதும், ஒண்ணுக்கும், ரெண்டுக்குமா.. இப்பவே நீ அரை ஆளா ஆயிட்டே.  இப்படியே எவ்வளவு நாள் செய்வே? கிழவிக்கு வாழணும்கற ஆசை இன்னும் போகலே..அதான் இப்படி அல்லாடறா…”

“என்ன பெரியம்மா? நமக்கு ஆயுசு இருந்ததுன்னா, என்னதான் செய்ய முடியும்?  நடை. உடையோட இருந்துட்டு, இப்படி பாயோட படுக்கையோட உயிரோட இருக்கணும்னு, யாராவது ஆசைப் படுவாளா? என்ன பக்தி? என்ன ஆசாரம்?  எவ்வளவு சுலோகம் சொல்லுவா?  எல்லாமே போய்.....அந்த மனசு எவ்வளவு கஷ்டப்படறதோ?”

     கிழவியின் உதடுகள் மடிந்து உடம்பு குலுங்குகிறது.
“ஆமாண்டியம்மா..எனக்கு உடம்பு ஒடுங்கிடுத்து, நாக்கு புரளலே. ஆனா..மனசு சதா வேலை செய்யறதே! ஆசாபாசம் அடங்கலியே! முருகா! உன்னைக் கூட நான் மறந்து போனேனே! ‘காக்கக் காக்க கனக வேல் காக்க, பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட….” மனதின் மொழியை வெளிப்படுத்த நாக்கு மறுக்கிறது.  கன்னாபின்னாவென்று வார்த்தைகள் கொட்டுகின்றன.

     வாசலில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு குட்டிப் பையன் ரத்னாவிடம் கேட்கிறான்,  ‘ஆன்ட்டி! இந்த  பாட்டி என்ன பேசறாங்க?  யாரையோ திட்டறமாதிரி இருக்கே?...’

‘பாட்டிக்கு யாரையும் திட்டத் தெரியாது.  ஏதாவது சுலோகம்தான் சொல்லுவாங்க …’"

‘அம்மாடி! நீயாவது என்னைப் புரிஞ்சுண்டியே….நீ நன்னா இருக்கணும்…’
பாட்டியின் இதழ்க்கடையில் சுருக்கங்கள்.

‘அதோ பார்!  பாட்டி சிரிக்கறாங்க ….’

‘பாட்டி ஏன் அழுதுண்டே சிரிக்கறாங்க?"

‘நரம்பெல்லாம் ‘வீக்’ ஆச்சுன்னா எதையுமே கட்டுப்படுத்த முடியாது.  சிரிச்சாலும் கண்ணுலே தண்ணி வரும்…."

‘இந்த பாட்டியோட பாஷையெல்லாம் இவங்களுக்கு மட்டும்தான் புரியும். நமக்கெல்லாம் புரியாது..." என்கிறாள் ரத்னாவின் பெரியம்மா.

     பாட்டிக்கு இரவும், பகலும் ஒன்றுதான். அரை மயக்க நிலையில், மனதில் தோன்றும் காட்சிகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.  அன்றும் அப்படித்தான்.

     “பத்து பேர் காலில் விழுந்து மாதவனை ஒரு வேலையில் அமர்த்தியாயிற்று. ரத்னா மருமகளாகிறாள். தாயற்ற அப்பெண்ணுக்கு கமலம் பிரசவம் பார்க்கிறாள். பேத்தி சுமதி, பிறகு பேரன் மகேஷ்..அந்த வீட்டின் ஒவ்வொரு இயக்கத்திலும் கமலத்தின் பங்கு இருக்கிறது.  சுமதியின் கல்யாணத்தின்போது கமலம் ஓய ஆரம்பித்து விட்டாள்…”

     சொத்தென்று ஏதோ ஒன்று முகத்தின் மேல் விழுந்து விட்டுப் போகிறது.  கிழவி அலறிக் கொண்டே விழிக்கிறாள்.  எப்படியோ உள்ளே வந்துவிட்ட ஒரு தவளை.  குச்சியால் அதைத் தள்ளிவிட கிழவியால் முடியவில்லை.  தீனமாக அலறுகிறாள். மாதவன் விழிக்கிறான்.

“சே! என்ன தொல்லை இது? நடு ராத்திரிலே அலறல்…நாள் பூரா தூங்கிட்டு, நாம தூங்கறச்சே உயிரை வாங்கறாளே! ரத்னா! போய்ப் பாரு…”

ரத்னா வந்து தவளையைத் தள்ளி விடுகிறாள். மறு நாளே வராந்தா அளவுக்கு, ஒரு பழைய நீளப் பலகையைத் தேடிப் பிடித்து, தடுப்பாக வைத்து விட்டுப் படுக்கச் செல்கிறாள்.

      சுட்டெரிக்கும் வெயிலுக்கிடையே  பெய்த ஒரு நாள் மழையினால், சூழ்நிலை குளிர்ந்திருக்கிறது.  கிழவி சாய்ந்து அமர்ந்து, வாசலில் விளையாடும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.  உள்ளே எண்ணெயில் பட்சணம் சுடும் வாசனை வருகிறது.  கிழவி வறண்ட உதடுகளை ஈரமாக்கிக் கொள்கிறாள்.

  சற்று நேரத்தில் வந்த ரத்னா, ஒரு ஸ்பூன் காராபூந்தியை நொறுக்கி, கிழவியின் வாயில் போடுகிறாள்.  கிழவியின் கண்களில் திருப்தி.  ஜாடையில் விசாரிக்கிறாள்,  ‘என்ன விசேஷம்?”

“நாளைக்கு மகேஷுக்குப் பிறந்த நாள்…”

கிழவி கையை நீட்டுகிறாள்.  அது எதற்கு என்று ரத்னாவுக்குத் தெரியும். “இருங்கோ..” உள்ளே செல்கிறாள்.
 
  மறு நாள்.  “எனக்கு பர்த்டே பாட்டி…” வணங்கும் பேரனை ஆசீர்வதிக்கிறாள் கிழவி.  ரத்னா கொடுத்த டப்பாவிலிருந்து பேனாவையும், சாக்லேட்டுகளையும் துழாவி எடுத்து, நடுங்கும் விரல்களால் மகேஷிடம் கொடுக்கிறாள்.

“தாங்க்ஸ் பாட்டி…’ பேரன் கல்லூரிக்குக் கிளம்புகிறான்.

பாட்டியின் முகத்தில் பரவசம்.  அதைப் பார்த்து ரசிக்கிறாள் ரத்னா.  வயதானவர்கள் எதையெல்லாம் விரும்புவார்கள் என்று அவளுக்குத் தெரியும்.

  அன்று மாதவனின் அலுவலக நண்பர்கள் வந்திருந்தார்கள்.  தொங்கும் திரைச்சீலைக்குப் பின்னால் புதுப்புது மனிதக் குரல்கள். இடையில் ‘ஸ்க்ரீன்’ விலக்கப்பட்டு, ஒரு சிறிய அறிமுகம். தொடர்ந்து உள்ளே பேச்சுக் குரல்கள் கேட்டன.

“இந்த மாதிரி படுத்த படுக்கையா நாலு நாள் கிடந்தாலே பார்த்துக்கறது கஷ்டம்.  நீங்க எல்லாரும் ‘க்ரேட்’, ஸார்…”

“மேடம்! சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.  நீங்க அவங்களுக்குப் பார்த்துப் பார்த்து ஆகாரம் கொடுக்கறீங்கன்னு ஸார் சொன்னார்.  அதெல்லாம் வேணாம்..இவங்க இன்னும் இருந்து என்ன சுகப்படப் போறாங்க?  போற உயிரைப் பிடிச்சு வெச்சுக்க வேணாம்..விட்டுடுங்க…”

  அவர்கள் சென்று விட்டார்கள்.  கையில் கஞ்சியுடன் வந்த ரத்னாவின் முகத்தில் குழப்பம்.  சற்று நேரமாகிவிட்டதால், கிழவியின் காய்ந்த உதடுகளும், நாக்கும் கஞ்சியை பரபரப்புடன் உள்வாங்கிக் கொண்டன.  ரத்னா யோசித்தாள். “எத்தனை பேருக்குப் பார்த்துப் பார்த்து பரிமாறிய ஜீவன்? இந்த ஜீவன் நாக்கும் பல்லும் உலர்ந்து போய், பசியால் வயிறு ஒட்டி இழுத்துக்கொண்டு, பரிதவிச்சுப் போய், அணுஅணுவா சாகறதை, நான் கண்கொண்டு பார்க்கணுமா? என்னாலே அப்படி ஒரு பாவத்தைச் செய்யவே முடியாது..கடவுளே! என் உடம்பு ஓய்ஞ்சு, மனசு சலிச்சுப் போறதுக்குள்ளே, இந்த ஜீவனுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுப்பா..”

  அன்று காலை முதல், ரத்னாவைக் காணவில்லை.  மகேஷ் பால் டம்ளரைக் கொண்டு வந்து வைக்கிறான்.  “அம்மாவுக்கு ஜுரம் பாட்டி, எழுந்திருக்க முடியலே…இதைக் குடிங்க ..நான் வாயிலே விடறேன்..காலேஜுக்கு டயமாச்சு.." 

கிழவி "வேண்டாம், நீ போ , நான் குடிப்பேன்.." என்பது போல் ஜாடை காட்டினாள் ..

  ரத்னாவுக்கு உதவ மதியம் வந்த பக்கத்து வீட்டு வேலைக்காரி கன்னியம்மா, திரைச் சீலையை விலக்கினாள். காலை மகேஷ் வைத்துச் சென்ற பால், செத்துப் போன ஈயுடன் அப்படியே இருந்தது.

“அட! நீ பாலைக் குடிக்கலியா? அம்மாவுக்குக் காய்ச்சல் நெருப்பு மாதிரி பொரியுது.  நான் கஞ்சி எடுத்தாரட்டுமா?”

“வேண்டாம்..பசியில்லை…” என்று ஜாடை காட்டினாள் கிழவி.

மாலை டாக்டர் வந்து சென்றார்.  அன்று இரவும், மகேஷ் வைத்தப் பாலை, கிழவி குடிக்கவில்லை.  மறு நாள் மாதவன் கத்தினான்.

“நீ என்ன நினைக்கறே? அவகிட்டே மட்டும்தான் செஞ்சுப்பியா?  அவ பெரிய படுக்கையா போட்டுடுவா போலேருக்கு. மகேஷ் எக்ஸாமுக்குப் படிக்கணும். உனக்கு உபசாரம் செய்ய எங்களுக்கெல்லாம் நேரம் கிடையாது தெரியுமா?”

அதற்குப் பின் இரண்டு நாட்கள் எந்த ஆகாரமும் வரவில்லை.  ஒரு வாய் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டுக் கிழவி சுருண்டு கிடந்தாள்>

    மூன்றாவது நாள் காலை.  சக்தியின்றி மயங்கிக் கிடந்த கமலத்தின் வாயில், ஒரு ஸ்பூன் பால் விழுகிறது.

“அம்மா! நீங்க இப்படி செய்யலாமா?”

ரத்னாவின் குரல் கேட்டு விழித்த கிழவியின் கண்களில் அதீத பளபளப்பு. கண்ணீருடன் ‘களக்..களக்..’ என்று பாலை சிறிது விழுங்குகிறாள்.  ரத்னாவின் இரு கைகளையும் பற்றி, தன் நெஞ்சின் மேல் வைத்துக் கொள்கிறாள்.  திடீரென்று கிழவிக்கு சுவாசம் வேகமாக வாங்குகிறது. பதறிய ரத்னா, எல்லா தெய்வங்களையும் மாறி மாறி பெயரிட்டு அழைக்கிறாள்.

  சற்று நேரத்தில் எல்லாமே அடங்கிவிட்டது.  ரத்னாவின் நெஞ்சு பரிதவித்தது. “தூங்க முடியாம இத்தனை நாள் நீங்க தவிச்சாச்சு. இனிமே நிம்மதியா தூங்குங்கோ..”

  செய்தியறிந்த மாதவன் ஃபோனில் அலுத்துக் கொண்டான், “அட ராமா! மாசக் கடைசியாச்சே! என்ன செய்வேன் இப்போ?”

“முடிஞ்சதைக் கொண்டு வாங்கோ. பார்த்துக்கலாம்…”

  கும்பல் சேர்ந்து விட்டது.  வாசலில் நின்ற காரிலிருந்து உள்ளே வந்தவர், விசாரித்துக்கொண்டு மாதவனிடம் வந்தார்…”உங்கம்மாவைப் பார்க்கத்தான் வந்தேன்..ஐயம் ஸாரி…இதை நான் எதிர்பார்க்கலே…” தொடர்ந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  “என் பேர் ராமநாதன். படுத்த படுக்கையாயிட்ட எங்கம்மாவைக் கமலம்மாகிட்டே ஒப்படைச்சுட்டுத்தான் நான் ‘ஸ்டேட்ஸ்’ போனேன்.  எங்கம்மாவுக்காக கமலம்மா செய்யாத வேலையே கிடையாது. இந்த மாதிரி சேவைக்கெல்லாம், சம்பளம் கொடுத்து கணக்கு தீர்க்க முடியாது. பணம்தான் அனுப்ப முடிஞ்சுதே தவிர, எங்கம்மா ‘டெத்’துக்குக் கூட என்னாலே வர முடியலே. எங்கண்ணாதான் காரியமெல்லாம் செஞ்சார்.  அப்படிப்பட்ட புண்யாத்மாவுக்குச் செய்யற பாக்கியம், உங்களுக்குக் கிடைச்சிருக்கு, ஸார்…”

மாதவன் கண்கள் நிலத்தை நோக்கின.

“உங்கம்மா ஃபோட்டோ இருந்தா கொடுங்க..பத்திரிகைக்குக் கொடுக்கறேன்.  அதோட எனக்கும் வேணும்…” என்றவர், பர்ஸைத் திறந்து ரூபாய் நோட்டுக்களை கொத்தாக உருவி, மாதவனிடம் திணித்தார்…”என்னோட யாரையாவது அனுப்புங்க.  செலவைப் பத்தி கவலைப்படாதீங்க.  இந்த புண்ணியத்துலே எனக்கும் பங்கு கிடைக்கட்டும்…”

  பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வந்து குவிந்த அனுதாபக் கடிதங்கள், மணியார்டர்கள், காசோலைகள்…. கமலம்மாவின் காரியங்கள் தடையின்றி நடந்தன.

  ராமநாதன் மாதவனிடம் அவனது அலுவலக வேலை, சம்பளம் ஆகிய விபரங்களை விசாரித்தார்.

“இருபது வருஷத்துக்கு மேலே ‘ஸர்விஸ்’ போட்டிருக்கீங்க.  சம்பளம் இவ்வளவு கம்மியா இருக்கே..கவலைப்படாதீங்க..நான் உங்களுக்கு இதை விட ‘பெட்டர் ஜாப்’ கிடைக்க ஏற்பாடு செய்யறேன்..மைலாப்பூர்லே எங்க பழைய வீட்டிலே ஒரு போர்ஷன் காலியாயிருக்கு..இதை விட வசதியாயிருக்கும்..நல்ல ‘ஸென்டர் ப்ளேஸ்’…நீங்க அங்கே குடி வந்துடுங்க…”

“இங்கேயெல்லாம் வாடகை கம்மி…மைலாப்பூர்னா.. நிறைய வாடகை என்னாலே கொடுக்க முடியாதே ஸார்…  மாதவன் தயங்கினான்.

“பரவாயில்லே…இப்போ நீங்க என்ன வாடகை கொடுக்கறீங்களோ, அதையே கொடுங்க… அங்கே ஒரு போர்ஷன்லே என் சித்தி இருக்காங்க.. ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கலாமே?”

ராமநாதன் வாயால் கூறியவற்றையெல்லாம்,செயல்படுத்தவும் செய்தார். 
“கமலம்மாவோட ஒரே பிள்ளை நீங்க.. உங்களுக்கு என்ன செஞ்சாலும் தகும்…”

நல்ல சம்பளத்தில் வேலை,  அருமையான குடியிருப்புப் பகுதியில் வசதியான இருப்பிடம்.....அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. 

 மகேஷ் அக்கா சுமதியிடம் கூறிக் கொண்டிருந்தான், “இந்த வீடு 'ஸூப்பர் லொகாலிடி'லே  அமைஞ்சிருக்குக்கா. ..அந்த அங்கிள் ரொம்ப நல்லவரா இருக்கார் இல்லே?” 

ரத்னா கூறுகிறாள், “அங்கிள் நல்லவர்தான். இதெல்லாம் அவர் செய்ய யார் காரணம் தெரியுமா?  உங்க பாட்டி…அத்தனையும் உங்க பாட்டியோட உழைப்பு, நல்ல மனசு..நமக்கு பாட்டியோட ஆசீர்வாதம் கிடைச்சிருக்கு…”

  யாரோ பெறாத பிள்ளை அணிவித்த சந்தன மாலையை அணிந்து, படத்தில் சிரித்துக் கொண்டிருந்த அம்மாவைக் கூர்ந்து நோக்கிய மாதவனின் கண்கள் பனிக்கின்றன.

“அம்மா! எனக்காக கண்ணுக்குத் தெரியாம இவ்வளவு சேர்த்து வைச்சிருக்கியேம்மா……உன் பிள்ளைன்னு சொல்லிக்கவே பெருமையா இருக்கே… உன்னை ஒதுக்கின எனக்கும், இப்படி ஆசீர்வாதம்
பண்ணறியேம்மா…”

 தன் தாயை நினைத்து, முதன்முறையாக மாதவன் குலுங்கிக் குலுங்கி
 அழுகின்றான்.

                             --------------------------
   

              என்ன?  கதையை  படிச்சீங்களா?  கமலம்மா கண்ணுக்குத் தெரியாம சேர்த்து வைச்ச சொத்து  என்னன்னு  தெரிஞ்சுகிட்டீங்களா?  அம்மான்னா  அம்மாதான். நம்ம கூட இருந்தாலும், பிரிஞ்சு போயிட்டாலும் , அவங்க மனசும், ஆத்மாவும் எதுவுமே முடியாட்டாலும், நமக்காக  சாமியையாவது வேண்டிக்கும்.  "செத்தும் கொடுத்தான் சீதக்காதி "ன்னு ஒரு கதை  சொல்லுவாங்க. சீதக்காதியாலே  மட்டும்தான் முடியுமா?  ஒவ்வொரு அம்மாவாலேயும் கூட முடியுங்க.  அட! நேரமாச்சு.  என் குழந்தைகள் எனக்காக பசியோட காத்திட்டிருப்பாங்க.  நான் வரட்டுமா நண்பர்களே!